ஃபக்த் ஃபாசில்
ஃபக்த் ஃபாசில்

பிட்டு படங்கள்தான் மலையாள சினிமாவின் அடையாளமா… உண்மை என்ன?! சுரேஷ் கண்ணன் மினி தொடர் - 2

மலையாளப்படம் என்றாலே செக்ஸ் படம் என்கிற அடையாளம் எண்பதுகளில் விழுந்ததில் சில துர்விளைவுகளும் இருந்தன. மலையாள சினிமாவின் புதிய மறுமலர்ச்சி இயக்குநர்கள் உருவாக்கிய கலை சார்ந்த முயற்சிகள் கூட தமிழகத்தில் அவ்வாறு அடையாளப்படுத்தப்பட்டதுதான் பெரிய சோகம்.
Published on

தோராயமாக எண்பதுகளின் காலக்கட்டத்தில், ஒரு சராசரியான தமிழ் சினிமா ரசிகனுக்கு மலையாள சினிமா என்றால் அது பெரும்பாலும் ‘அந்த’ மாதிரியான படமாகத்தான் இருந்தது. ஆம், ‘soft porn movies’ எனப்படும் மென்பாலியல் திரைப்படங்கள்தான் மலையாளச் சினிமாக்களின் அடையாளமாக இங்கு இருந்தது. ஒருவர் ‘மலையாளப் படம் பார்த்தேன்’ என்றாலே இன்னொருவர் நமட்டுச் சிரிப்புடன் ‘ஓ.. அந்தப் படமா?” என்று கேட்கும் அளவிற்கான அறியாமை இருந்தது.

இந்த மாதிரியான வணிகத்தை ஊதிப் பெருக்கும் வகையில் ஒரு மலையாளப் படத்தில் ஒரேயொரு சாதாரணமான கவர்ச்சிக் காட்சி இருந்தால் கூட அதைச் சுவரொட்டியில் பிரதானப்படுத்தி ‘A’ என்கிற எழுத்தை கொட்டை எழுத்தில் அச்சிட்டு அரங்கை நோக்கி கூட்டமாக கூட்டமாக வரவழைக்கும் யுக்தியை, தமிழ்ச் சினிமாவின் வியாபாரிகள் கடைப்பிடித்ததின் காரணமாக  மலையாளப்படம் என்றாலே ‘செக்ஸ் படம்’ என்கிற கலாசாரத்தை ஆழமாக இங்கு விதைத்து விட்டார்கள். இந்த ‘A’ படங்களின் வணிகம் பிரமாண்டமாக வளர்ந்ததின் காரணமாக ஒரு கட்டத்தில், அதாவது தொன்னூறுகளின் காலக்கட்டத்தில் ஷகிலா, ரேஷ்மா போன்றவர்களின் பாலியல் படங்கள் பெருகியோடத் துவங்கின.

‘பிட்டு படங்கள்தான்’ மலையாளச் சினிமாவின் அடையாளமா?

இவற்றைத் தயாரிப்பதற்கு அதிக முதலீடு தேவையில்லை. முதலீடு மட்டுமல்ல, கதை என்கிற சமாச்சாரம் கூட தேவையில்லை. ஒரு சிறிய அறையில் சில நெருக்கமான காட்சிகளும் காமா சோமா என்றொரு கதையும் இருக்கும். ரசிகர்கள் எதிர்பார்ப்பது கதையையா என்ன? சதையைத்தானே?.. எனவே அதை ஃபோகஸ் செய்வது போல காட்சிகள் மையப்படுத்தப்பட்டிருக்கும். இதில் வேடிக்கை என்னவென்றால், பாலியல் விழிப்புணர்வுப் படங்கள் என்கிற போர்வையில் செக்ஸ் காட்சிகளை சாமர்த்தியமாக நுழைக்கும் பேர்வழிகளும் உண்டு. சென்சார் பார்வையிலிருந்து தப்பிப்பதற்காக இந்த ஏற்பாடு.

ஆனால், இதென்ன பிரமாதம்..? இவற்றையெல்லாம் மீறி ஒரு ‘அயிட்டம்’ இருக்கிறது. படத்தின் இன்டர்வெல் காட்சி முடிந்ததும், படத்திற்கு சம்பந்தமில்லாமல் ஒரு துண்டுக்காட்சி ஓடும். சற்று அப்பட்டமான பாலியல் காட்சிகளாக இருக்கும். ‘பிட்டு’ என்பது அதன் அடையாளப் பெயர். ‘இந்தப் படத்தில் பிட்டு சீன்கள் சூப்பர்’ என்று ரசிகர்களின் வாய்மொழி மூலமாகவே புகழ்பரவி கல்லா கட்டிய படங்கள் பலவுண்டு. இந்தப் பிட்டு சீன்கள் இல்லாமல் ரசிகர்கள் ஏமாற்றமும் கோபமும் அடைந்து அரங்கின் இருக்கைகளை சேதப்படுத்தி செல்வார்கள். 

ஒரு கட்டத்தில் ஷகிலா, ரேஷ்மா வகையறா திரைப்படங்களின் வணிகம் என்பது கேரளத்தின் சூப்பர் ஸ்டார் படங்களின் வணிகத்திற்கு நிகராகவும் ஏன் அதற்கு மேலாகவும் தாண்டி வசூல் சாதனையைப் படைத்தது. இந்தப் படங்களுக்கு அதிக அளவில் முதலீடு தேவையில்லை என்பது தவிர, இவற்றை எந்தவொரு மொழியில் டப்பிங் செய்து வெளியிட்டாலும் உத்தரவாதமான வெற்றியுண்டு என்பதால் லாபம் கொட்டோ கொட்டோவென்று கொட்டியது. 

நல்ல படங்களும் செக்ஸ் படங்களாக புரிந்து கொள்ளப்பட்ட பரிதாபம்

உண்மையில் இவற்றைத்தான் ‘PAN INDIA’ படங்கள் என்று சொல்ல வேண்டும். யூனிவர்சல் திரைப்படங்கள் என்று சொன்னால் கூட தப்பில்லை. அந்த அளவிற்கு இந்தப் படங்கள் உலகமெங்கும் வாழும் இந்திய ரசிகர்களிடையே பெரும் வரவேற்றைப் பெற்றன. இதன் வணிகம் தங்களுக்கு போட்டியாக வளர்ந்து வருவதைக் கண்டு அஞ்சிய சூப்பர் ஸ்டார் நடிகர்கள், ஷகிலா வகையறா நடிகைகளை மிரட்டி துரத்தியதாகவும் கர்ண பரம்பரைக் கதைகள் உண்டு.

மலையாளப்படம் என்றாலே செக்ஸ் படம் என்கிற அடையாளம் எண்பதுகளில் விழுந்ததில் சில துர்விளைவுகளும் இருந்தன.  மலையாள சினிமாவின் புதிய மறுமலர்ச்சி இயக்குநர்கள் உருவாக்கிய கலை சார்ந்த முயற்சிகள் கூட தமிழகத்தில் அவ்வாறு அடையாளப்படுத்தப்பட்டதுதான் பெரிய சோகம். உதாரணத்திற்கு ‘ரதி நிர்வேதம்’ என்கிற திரைப்படம், ஒரு வளரிளம் இளைஞனின் பாலியல் தேடலை நுட்பமான திரைமொழியில் பதிவு செய்த திரைப்படம். ஆனால் இது போன்ற ‘Coming of age’ திரைப்படங்களும் இங்கு ‘செக்ஸ்’ படங்களாக முத்திரை குத்தப்பட்டதுதான் பரிதாபம். ‘அவளோட ராவுகள்’ என்று இந்த வரிசையில் பல திரைப்படங்களைச் சொல்லலாம். 

‘செக்ஸ்’ படங்களின் அடையாளமாக மலையாளச் சினிமா இங்கு மாறியதை பெரும் துரதிர்ஷ்டம் எனலாம். ஏனெனில் மலையாளத் திரைப்படங்கள் செழுமையான கலாசார, பண்பாட்டு பின்புலங்களைக் கொண்டவையாக இருந்தன. கல்வியறிவு மிகுந்த மாநிலம் என்பதால் ரசிகர்கள் பெரும்பாலும் கூர்மையான ரசனையுணர்ச்சி கொண்டவர்களாக இருந்தார்கள். அங்கும் வணிகத்திரைப்படங்கள் பிரதானமாக ஓடும் என்றாலும் கலையமைதி கொண்ட படங்களை ரசிப்பதற்கும் கணிசமான ரசிகர்கள் இருந்தார்கள். மலையாளத்தின் மிகச் சிறந்த இலக்கிய எழுத்தாளர்களின் கதைகளும் நாவல்களும் படமாகின. 

மலையாள சினிமாவின் பொற்காலம்

எண்பதுகளின் காலக்கட்டத்தை மலையாளச் சினிமாவின் பொற்காலம் எனலாம். சிறந்த எழுத்தாளர்களே இயக்குநர்களாகவும் திரைக்கதையாசிரியர்களாகவும் மாறினார்கள். எம்.டி.வாசுதேவன் நாயர், லோகித தாஸ், பி.பத்மராஜன், அடூர் கோபாலகிருஷ்ணன், அரவிந்தன், ஸ்ரீனிவாசன் போன்றவர்கள் மிகச்சிறந்த அடித்தளத்தை ஏற்படுத்தினார்கள். கேரளத்தில் உருவாக்கப்பட்ட திரைப்படங்கள் தேசிய அளவிலும் சர்வதேச அளவிலும் கவனிக்கப்பட்டன. அங்கீகாரங்களையும் விருதுகளையும் பெற்றன.

இதர மாநிலங்களின் திரைப்படங்களுக்கும் மலையாளச் சினிமாவின் தோற்றத்திற்கும் அடிப்படையில் ஒரு வித்தியாசம் உள்ளது. இந்தியச் சினிமா உருவான துவக்க காலக்கட்டத்தில், இதர மாநிலங்களில் புராணங்கள், இதிகாசங்களை அடிப்படையாகக் கொண்ட கதைகளைக் கொண்ட சினிமா உருவாக்கப்பட்ட போது,  மலையாளச் சினிமா சமூகப் பிரச்சினைகளைப் பற்றி பேசுகிற படங்களுடன் தனது பயணத்தை ஆரம்பித்தது. 

திருவிதாங்கூரைச் சேர்ந்த ஜே.சி.டானியலுக்கு சினிமாக்கலையின் மீது ஆர்வம் பிறக்கிறது. அப்போது சென்னைதான் தென்னிந்திய சினிமாக்களின் மையமாக இருந்தது. இங்கு வந்து சினிமாவைக் கற்க முனைகிறார். ஆனால் அந்தச் சந்தர்ப்பங்கள் வெற்றிகரமாக அமையவில்லை. எனவே மும்பைக்குச் சென்று சினிமா உருவாக்கத்தைப் பற்றி அறிந்து கொள்கிறார். பிறகு கேரளத்திற்கு திரும்பிய அவர், ‘தி திருவிதாங்கூர் நேஷனல் பிக்சர்ஸ்’ என்கிற பெயரில் சொந்த சினிமா ஸ்டூடியோவை உருவாக்குகிறார். தன்னிடமிருந்து நிலத்தை விற்று சினிமா எடுக்கத் துவங்குகிறார்.

மோகன்லால் - ஃபகத்
மோகன்லால் - ஃபகத்

இதில் பெண் வேடத்தில் நடிப்பதற்கு ஆட்கள் கிடைப்பது அரிதானதாக இருந்தது. நாடகத்தில் ஆண்களே ‘ஸ்திரிபார்ட்’  வேடமிட்டு நடித்துக் கொண்டிருந்த காலம் அது.. பெண்கள் நடிப்பது விபசாரத்திற்கு இணையாக கருதப்பட்டது.  மிகவும் சிரமப்பட்டு பி.கே.ரோசி என்பவரை அழைத்து வருகிறார். பல நடைமுறைச் சிரமங்களுக்குப் பிறகு படம் வெளியாகிறது. ஆனால் இதைத் திரையிடும்போது கலவரமும் திரையைச் சேதப்படுத்தலும் நடந்தது. காரணம், பி.கே.ரோசி ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண். ‘இவர் எப்படி ‘நாயர்’ பெண்ணாக திரைப்படத்தில் நடிக்க முடியும்?’ என்கிற நோக்கில் இந்த எதிர்ப்புகள் எழுந்தன. திரையரங்கத்திற்கு வர முயன்ற ரோசி, சாதி இந்துக்களால் தாக்கப்பட்டு துரத்தியடிக்கப்பட்டார். தான் நாயகியாக நடித்த திரைப்படத்தை அவரே பார்க்க முடியாத நிலைமை. இவர்தான் மலையாள சினிமாவின் முதல் நடிகை.

‘விகேதகுமாரன்’ என்கிற அந்த ஊமைப்படம் 1930-ல் வெளியானது. கதை, இயக்கம், நடிப்பு, தயாரிப்பு என பல பொறுப்புகளை ஏற்றுக் கொண்ட ஜே.சி.டானியல் பொருளாதார ரீதியான நஷ்டங்களை சந்தித்து பிறகு பல்மருத்துவராக பாளைங்கோட்டை, மதுரை போன்ற ஊர்களில் காலத்தைக் கழித்தார். ‘விகேதகுமாரன்’தான் மலையாளத்தின் முதல் சினிமாப்படம். சமூகப் பிரச்சனையைப் பற்றி பேசிய முதல் இந்தியச் சினிமா இதுதான். சாதிய எதிர்ப்பு  காரணமாக அரங்குகளில் சில காட்சிகள் மட்டுமே திரையிடப்பட்ட இந்தத்  திரைப்படத்தின் பிரதி இன்று நம்மிடையே இல்லை என்பதுதான் பெருஞ்சோகம்.

ஆக மிக வலுவான அடித்தளத்தைக் கொண்ட மலையாளச் சினிமாவிலிருந்து சிறந்த படங்கள் வெளிவருவதில் ஆச்சரியமில்லை. ஆனால் தமிழ் சினிமா?....

தொடர்ந்து பேசுவோம்!

சுரேஷ் கண்ணன் தொடரின் அடுத்தப்பகுதி வரும் வெள்ளிக்கிழமை (16-08-2024) வெளியாகும்.
logo
News Tremor
newstremor.com