மலையாள சினிமா தமிழ் சினிமாவை ஓரங்கட்டுகிறதா..? மோலிவுட் Vs கோலிவுட் - சுரேஷ் கண்ணன் மினி தொடர் -1
கடந்த சில வருடங்களாகவே, தமிழ் சினிமாவின் பெரும்பாலான ரசிகர்கள் சோஷியல் மீடியாக்களில் எந்த மாதிரியான திரைப்படங்களைப் பற்றி தொடர்ந்து பேசி சிலாகித்து வருகிறார்கள் என்பதைக் கவனித்தால் ஆச்சர்யமாக இருக்கிறது. அது தமிழ்த் திரைப்படங்களைப் பற்றி அல்ல. மாறாக மலையாளத் திரைப்படங்களைப் பற்றி.
கட்டற்ற இணையம், ஓடிடி போன்ற திரை சொகுசுகள், பெருகும் ஆன்லைனை் சேனல்கள் போன்றவை சினிமா ரசிகர்களுக்கு மிகப் பெரிய வாசலை திறந்து விட்டிருக்கின்றன. முன்பெல்லாம் அயல் மொழியில் எந்தவொரு நல்ல சினிமா வெளியானாலும் அதைப் பார்ப்பதற்கு ஒருவர் நீண்ட காலம் காத்திருக்க வேண்டும். கலைப்படமாக இருந்தால் ஃபிலிம் ஃபெஸ்ட்டிவல் போன்ற சிறு குழுமங்களில் மட்டுமே பார்க்க முடியும்.
ஆனால் இன்றைய நிலைமை அப்படியல்ல. அது வணிகரீதியாக வெற்றி பெற்ற படமோ அல்லது விமர்சன ரீதியாக வரவேற்புடன் கூடிய விருது பெற்ற படமோ, மிகக் குறைவான காலத்திலேயே அதைப் பார்ப்பதற்கான வசதிகள் பெருகி விட்டன. திரையரங்கத்துக்குச் சென்று அதிக செலவழித்துப் பார்ப்பதை விடவும் வீட்டில் அமர்ந்து குறைந்த கட்டணத்தில் காணக் கூடிய கட்டண சேனல்கள் வந்து விட்டன.
சினிமாவை வீட்டுக்கு அழைத்து வரும் நுட்ப வசதிகள்
இத்தகைய சூழல் சினிமா ரசிகர்களுக்கு மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தும் நல்வாய்ப்பாக அமைந்திருக்கிறது. அயல் மொழித் திரைப்படங்களை ஆங்கில சப்டைட்டில் கொண்டு மட்டுமே பார்க்க முடியும் என்கிற முந்தைய நிலைமை மாறி, இன்று அந்தந்த பிராந்திய மொழிகளின் சப்டைட்டில் மற்றும் மொழி மாற்றும் வசதி போன்வற்றோடு பார்க்க முடிகிற அளவிற்கு நுட்ப வசதிகள் பெருகியுள்ளன.
சுருக்கமாகச் சொல்வதென்றால், ஒரு நல்ல திரைப்படம் வெளியானால் உடனே காணக்கூடிய வாய்ப்பு பெருகியதோடு மட்டுமல்லாமல், மொழி, கலாசாரம் போன்ற தடைகளைத் தாண்டி அந்த சினிமா வெகுவாக கவனித்து கொண்டாடப்படும் என்பதை ரசிகர்கள் தொடர்ந்து மெய்ப்பித்து வருகிறார்கள். அதற்கேற்ப சந்தையும் பல்வேறு வாய்ப்புகளுடன் விரிந்து வளர்ந்து வருகிறது.
இப்படியான சந்தை விரிவாக்கமும் தொழில்நுட்ப வசதிகளும் ஒரு சினிமா ரசிகனின் ரசனையை கூர்மைப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை அதிகப்படுத்தியிருக்கிறது. பிடிக்கிறதோ, இல்லையோ தனக்கு முன் வைக்கப்பட்ட உணவை அரை மனதோடு சாப்பிட்டுத் தொலைக்கும் தொந்தரவைப் போல அல்லாமல் சர்வதேச அளவிலான விதவிதமான உணவுகளை ருசி பார்ப்பது போல, இந்தியச் சினிமாக்களைத் தாண்டி பல்வேறு அயல் சினிமாக்கள், வெப் சீரிஸ்கள், டாக்குமெண்டரிகள், ரியாலிட்டி ஷோக்கள் என்று பொழுதுபோக்குச் சந்தையானது மிகப் பிரமாண்டமாக வளர்ந்துள்ளது.
மலையாளத் திரைப்படங்கள் அடைந்து வரும் வெற்றிகள்!
இந்த நோக்கில், தமிழ் ரசிகர்களின் சினிமா நுகர்வு பொதுவாக எப்படி அமைந்திருக்கிறது என்பதைக் கவனித்தால் தமிழ்த் திரைப்படங்களை விடவும் மலையாளச் சினிமாவுக்கு அதிக ஆதரவை அள்ளித் தரும் போக்கு பெருகியிருப்பதைக் கவனிக்க முடிகிறது. அதற்கானதொரு சரியான உதாரணம், ‘மஞ்ஞும்மல் பாய்ஸ்’ எனும் மலையாளத் திரைப்படம் சமீபத்தில் அடைந்திருக்கும் பிரம்மாண்டமான வெற்றி. அது மலையாளப் படமாக இருந்தாலும் கேரளத்தை விடவும் அதிகமான அளவுக்கு தமிழகத்தில் பேயோட்டமாக ஓடி இருநூறு கோடி ரூபாய்க்கும் மேலாக வசூலித்திருக்கிறது. இந்த அசாதாரணமான வரவேற்பை சேட்டன்மார்கள் கூட எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். மலையாள சினிமாவின் வரலாற்றிலேயே 200 கோடி வணிகத்தை முதலில் எட்டிய படம் ‘‘மஞ்ஞும்மல் பாய்ஸ்’தான்.
இந்தத் திரைப்படம் மட்டுமல்லாமல், இந்த ஆண்டில் வெளியான ‘பிரேமலு’, ‘பிரம்மயுகம்’, ‘ஆவேஷம்’, ‘ஆடு ஜீவிதம்’, ‘குருவாயூர் அம்பல நடையில்’ போன்ற மலையாளத் திரைப்படங்களையும் தமிழ் ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்துக் கொண்டிருக்கிறார்கள். சமீபத்தில் வெளியான ‘உள்ளொழுக்கு’ திரைப்படமும் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்திருக்கிறது. ஊர்வசியும் பார்வதியும் போட்டி போட்டுக் கொண்டு தந்திருக்கும் நடிப்பை ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள்.
இதற்கு நேர்மாறாக தமிழ் மொழியில் வெளியான பல திரைப்படங்கள் வணிகரீதியாகவும் சரி, விமர்சனரீதியாகவும் சரி பெரிய வீழ்ச்சியை சந்தித்து வருகின்றன. அதற்கான சரியான உதாரணம் ‘இந்தியன் - 2’. முதற்பாகம் அடைந்த மகத்தான வெற்றி காரணமாகவும் கமலின் சிறந்த நடிப்பு காரணமாகவும், ஏறத்தாழ 17 வருடங்களுக்குப் பிறகு வெளியானாலும் கூட ‘இந்தியன் - 2’ திரைப்படத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் அசுவாரசியமான திரைக்கதை காரணமாக அத்தனை வருட உழைப்பும் வீணானது. அனைத்து விதமான ஜனரஞ்சக அம்சங்கள் இருந்தாலும் சுவாரசியமற்ற தன்மை காரணமாக ‘இந்தியன் 2’ படத்தை ரசிகர்கள் புறக்கணித்து விட்டார்கள். ‘இந்தியன் 2’ மட்டுமல்ல, பல்வேறு தமிழ்த் திரைப்படங்களின் கதியும் இதுதான்.
திரைக்கதைதான் என்றும் ‘மகாராஜா’
அது முன்னணி நாயகர்களின் படமாக இருந்தாலும் சரி, PAN இந்தியா என்கிற பிரம்மாண்ட திரைப்படங்களாக இருந்தாலும் சரி, திரைக்கதை உள்ளிட்ட அனைத்து அம்சங்களும் சரியான கலவையில் இருந்தால்தான் குறைந்தபட்ச வெற்றியை எட்ட முடியும் என்கிற நிலைமை ஏற்பட்டிருக்கிறது. ‘சுவாரசியமாகவும் திறமையாகவும் ஒரு கதை சொல்லப்பட்டிருக்கிறதா?’ என்பதிற்குத்தான் முன்னுரிமை தந்து பார்க்கப்படுகிறது.
தென்னிந்திய மொழித் திரைப்படங்களின் உருவாக்கங்களில் தமிழ்தான் பிரம்மாண்டமான சந்தையைக் கொண்டது. பெரிய பொருட்செலவில் உருவாக்கப்படும் திரைப்படங்களும் சரி, கோடிக்கணக்கில் பெறப்படும் நட்சத்திரங்களின் சம்பளமும் சரி, தென்னிந்தியாவின் இதர மாநிலத்தைச் சேர்ந்த திரைப்படத் துறையினர் பெருமூச்சு விடும் அளவிற்கான வணிகத்தைக் கொண்டதாக இருந்தது. அது மட்டுமல்லாமல் விஜய், சூர்யா போன்ற நடிகர்களின் படங்கள், தமிழுக்கு நிகரான வரவேற்பை கேரளாவிலும் பிற மாநிலங்களிலும் பெற்றன. வசூலை வாரிக் குவித்தன.
ஒரு கட்டத்தில், மலையாளச் சினிமாவும் இந்த மசாலாத்தன்மையை நகல் எடுத்தது. அங்குள்ள சூப்பர் ஸ்டார்களான மம்முட்டியும், மோகன்லாலும் வேட்டியை வரிந்து கட்டிக் கொண்டு மசாலா திரைப்படங்களில் நடிக்கத் துவங்கினார்கள். இதற்கான பலன்கள் கிடைக்கத் துவங்கின. 2016-ல் வெளியான ‘புலிமுருகன்’ திரைப்படம், பிரமாண்டமான வசூலை வாரிக்குவித்தது. மலையாளத் திரைப்பட வரலாற்றிலேயே முதன்முறையாக நூறு கோடி வருவாயைத் தொட்ட படம் ‘புலி முருகன்’. ஆனால், மலையாள சினிமா ரசிகர்கள் மட்டுமல்ல, நல்ல மலையாளத் திரைப்படங்களை ரசிக்கும் தமிழ் ரசிகர்களும் கூட முகஞ்சுளிக்கும் அளவுக்கு இந்த மசாலாத்தன்மையின் நெடி அதிகரித்தது.
தமிழ் மசாலாவை காப்பிடியத்த கேரளம்
கமர்ஷியல் திரைப்படங்கள் ஒரு பக்கம் வெளிவந்தாலும், மிகச் சிறந்த சிறுமுதலீட்டுத் திரைப்படங்களும் மலையாளத்தில் வெளிவந்து கொண்டே இருக்கும். அந்தக் கலாசாரத்தின் ரசனை அடிப்படை கட்டுமானம் அப்படி. இந்திய அளவில் மேற்கு வங்கம் மற்றும் கேரள மாநிலங்களில்தான் தேசிய விருதுகளை வாரிக் குவிக்கும் நல்ல திரைப்படங்கள் வெளியாகிக் கொண்டிருந்தன. ஆனால் தொடர்ந்து வெளிவந்த மசாலாத் திரைப்படங்கள் இந்த அடிப்படை ரசனைத்தன்மையைக் குலைக்க ஆரம்பித்தது. ஆனால் இதெல்லாம் பழைய கதை.
நிலைமை இன்று அப்படியல்ல. இளம் தலைமுறை இயக்குநர்கள் ஏற்படுத்தி வரும் புதிய மறுமலர்ச்சி காரணமாக அங்கு தலைகீழ் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. வணிக அம்சங்களைக் கொண்டிருந்தாலும் மிகச் சிறந்த திரைப்படங்கள் உருவாகிக் கொண்டிருக்கின்றன. குறைந்த பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டிருந்தாலும் நேர்த்தியான திரைக்கதை காரணமாக, கலாசார எல்லைகளைக் கடந்து மிகப்பெரிய வெற்றியை அடைந்து வருகின்றன. இவற்றை மலையாள ரசிகர்கள் கொண்டாடுவதில் கூட ஆச்சரியமில்லை. தமிழ் ரசிர்களிடையேயும் இத்தகைய படங்களை பெருவாரியாக வரவேற்கும் போக்கு அதிகரிப்பதில் சிறிது ஆச்சரியமிருக்கிறது.
என்னதான் ஆயிற்று? விவேக் நடித்த ஒரு நகைச்சுவைக் காட்சியில், ஓமனப் பெண்ணின் மீது ஏற்படும் பிரேமையால் ஸ்டேட் மாறி விடுவார். “இனி என்டே மதர் டங் மலையாளம், என்டே ஸ்டேட் கேரளம், என்டே சிஎம் நாயனார், என்டே நடனம் கதகளி” என்று வேட்டி, நம்பூதிரி குடுமி வைத்து ‘சேட்டனாக’ உருமாறி அலப்பறை செய்வார்.
விவேக்கின் அந்த காமெடிக் காட்சி போல தமிழ் சினிமாவின் பார்வையாளர்களும் இப்படி திடீரென கட்சி மாறி விட்டார்களா? தமிழ் சினிமாக்களை விடவும் மலையாள சினிமாக்களுக்கு அதிகமான ஆதரவும் வரவேற்பும் தருகிறார்களா? தமிழில் நல்ல கதையம்சங்கள் உள்ள சிறுமுதலீட்டுப் படங்கள் வெளியாவதில்லையா? அவற்றை கண்டு கொள்ளாமல் மலையாள சினிமாவை மட்டும் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுவது ஏன்?
தொடர்ந்து பேசுவோம்!
சுரேஷ் கண்ணனின் மோலிவுட் Vs கோலிவுட் மினி தொடரின் அடுத்த அத்தியாயம் திங்கட்கிழமை வெளியாகும்!