‘’சினிமாகாரர்களே எனக்கு எதிராக சதி செய்கிறார்கள்'’ - நிவின் பாலி
மலையாள நடிகர் நிவின் பாலி மீது சமீபத்தில் எழுந்த பாலியல் குற்றச்சாட்டு எல்லாரையும் அதிர்ச்சியடைய வைத்தது. ஆனால், உடனடியாக பத்திரிகையாளர்களை சந்தித்து இந்தக் குற்றச்சாட்டை மறுத்த நிவின் பாலி அதற்கான ஆதாரங்களையும் போலீஸிடம் சமர்பித்தார்.
இந்நிலையில் நிவின் பாலி இன்று போலீஸ் ஏஜிடியிடம் புகார் மனு ஒன்றை அளித்திருக்கிறார். அதில் அவர் தன் மீதான பாலியல் குற்றச்சாட்டுக்குப் பின்னால் சதி இருப்பதாகவும், மலையாள சினிமாவிலுள்ள சிலர் தான் இதற்குப் பின்னால் இருக்கிறார்கள் என்கிற சந்தேகம் இருப்பதாகவும் தெரிவித்திருகிறார். மேலும் இந்தக் குற்றச்சாட்டின் முழு பின்னணியையும் விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.
நிவின் பாலி, திரைப்பட தயாரிப்பாளர் ஏ.கே. சுனில் உள்பட ஆறு பேர் மீது கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. புகார் அளித்தப் பெண் துபாயில் படவாய்ப்பு தருவதாகக் கூறி தன்னை பாலியல் வன்முறை செய்ததாக குற்றம் சாட்டியிருந்தார்.
ஆனால், நிவின் இது அடிப்படை ஆதாரமற்றது, உண்மை வெளிவரும் வரை போராடுவேன் என்று அறிவித்திருந்தார். இது மட்டும் இல்லாமல், அவருடைய நண்பரும் இயக்குனருமான வினீத் ஸ்ரீனிவாசன், குற்றம் நடந்ததாகச் சொல்லப்பட்ட தேதியில் நிவின் பாலி கொச்சியில் தன்னுடன் சினிமா படப்பிடிப்பில் இருந்தார் என்றும், அவர்கள் அங்கு தங்கியிருந்ததற்கான ஹோட்டல் பில் வரையும் ஆதாரமாக அளித்திருந்தார்.
இதோடு, சக நடிகர்களான ஃபகத் மானுவல் மற்றும் பார்வதி கிருஷ்ணா ஆகியோரும் குறிப்பிடப்பட்ட தேதியில் நிவின் பாலி ஷூட்டிங் செட்டில் இருந்தது உண்மை என்று உறுதிபடுத்தி, அவருக்கு ஆதரவாக வாக்குமூலம் அளித்துள்ளனர்.
‘’நிவின் பாலி நியாயத்தை நிரூபிக்க போராடி வருகிறார். இந்த சதியின் பின்னணியில் யார், யார் இருக்கிறார்கள் என்பதை போலீஸ்தான் வெளிக்கொண்டுவர வேண்டும்’’ என்கிறார்கள் நிவின் பாலியின் ரசிகர்கள்.