'தங்கலான்' பா.இரஞ்சித் : விக்ரமை நான் நினைக்கிற மாதிரி நடிக்க வெச்சேன்… அவர் நினைச்சத பண்ண விடல!
இவ்விழாவில் இயக்குநர் பா.இரஞ்சித் பேசியதன் சுருக்கம் இங்கே!
‘’தயாரிப்பாளர் ஞானவேல் கூட இப்ப படம் பண்ணாத… பண்ணா நிறைய பிரச்சனைங்க வரும்னு சொன்னாங்க… ஆனா, இந்த நேரத்துல ஞானவேல்கூட நிக்கணும்னு தோணுச்சு… நின்னேன். அதற்கு அவர் எனக்கு செஞ்சது ரொம்பவே பெரிய விஷயம். பட்ஜெட்ல இருந்து நான் நினைச்ச படத்தை எந்த சமரசமும் இல்லாம எடுக்க உதவி பண்ணார். அந்த நன்றிய வெற்றியா கொடுக்கணும்னு நினைக்கிறேன். அவர் தந்த சுதந்திரத்தை பயன்படுத்திக்கணும்னு மட்டும் நினைக்கல… ஒரு தயாரிப்பாளரா அவர் என்னை நம்புனதுக்கு, ஒரு அண்ணனா என்னை நம்புனதுக்கு, ஒரு தம்பியா அவருக்கு ஒரு வெற்றியைக் கொடுக்கணும்னு ஆசைப்படுறேன்.
வரலாறு ஒன்சைடடாவே இருக்கு… சினிமாவிலும் அதே நிலைமைதான். அம்பேத்கருடைய 'தீண்டப்படாதவர்கள் யார்' என்கிற புத்தகம் இருக்கு… வரலாறு என்பது கல்வெட்டுகள்ல எழுதப்பட்டது மட்டுமேயல்ல.. எழுதப்படாதது வரலாறு இல்லையா? சொல்லப்பட்டாத பக்கங்களை தேடிக்கண்டிபிடித்து, தன்னுடைய கற்பனையால் மீள் உருவாக்கம் செய்வது முக்கியம் என அம்பேத்கர் இந்த புத்தகத்தில் சொல்லியிருக்கிறார். நம்பிக்கைகளை மட்டுமே சொன்னால் சினிமாவில் வெற்றிபெற்றுவிடமுடியாது.
வெங்கட் பிரபுகிட்ட அசிஸ்டென்ட்டா வேலை செஞ்ச ‘சென்னை 600028’ படம் மூலம்தான் நம்ம கதைகளும் வெற்றியடையும்கிற நம்பிக்கை வந்துச்சு. ‘சென்னை 600028’ படத்தில வர்ற பசங்களோட வாழ்க்கைக்கும், எனக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. படம் பெருசா வெற்றியடைஞ்சது… மக்கள்கூட ஈஸியா கனெக்ட் ஆச்சு. ஒரு கொண்டாட்டத்தை, ஒரு மகிழ்ச்சியை சொல்லவிடாத கதைகள் மூலமா சொல்றப்போ ஈஸியா ஆடியன்ஸோட கனெக்ட் பண்ணிடமுடியும்னு விபி -கிட்ட இருந்து கத்துக்கிட்டேன்.
அடுத்து ‘மெட்ராஸ்’ படம் பண்ணேன்… இது ஒரு தலித் சினிமா, தலித் வாழ்க்கையை சொல்லப்போற சினிமான்னு தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா, நடிகர் கார்த்திகிட்ட சொல்லிட்டுத்தான் பண்ணேன். ‘மெட்ராஸ்’ படம் பெரிய ஹிட் ஆச்சு. 'மெட்ராஸ்' படம், அதோட அரசியல் புடிச்சதுனாலதான் ரஜினி ‘கபாலி' கொடுத்தாரு. ‘கபாலி’ வெற்றியடைஞ்சதாலதான் ‘கலா’ கொடுத்தாரு…
‘சார்பட்டா’ படம் முடிஞ்சதும் விக்ரம் என்னைக் கூப்பிட்டாரு. நாம படம் பண்ணலாம்னு சொன்னாரு. முதல்ல விக்ரமோட படம் பண்றதுல எனக்குத் தயக்கம் இருந்துச்சு. நாம சொல்றதைக் கேட்பாரா… நாம சொல்றதைக் கேட்டு பண்ணணுமேன்னு யோசிச்சேன். அதை அவர்கிட்டயும், அவர் மேனேஜர் கிட்டயுமே சொன்னேன். விக்ரம் கிட்ட கதையை ஒழுங்காகூட சொல்லல. ஆனா, நான் என்ன சொல்லவரேன்னு புரிஞ்சிக்கிட்டு கதையை ஒத்துக்கிட்டாரு. அவர் ஓகே சொன்னப்பிறகுதான் சவால் ஆரம்பமாச்சு. படத்துல மேஜிக்கல் ரியலிசமை ட்ரை பண்ணேன். எழுத்தாளர் தமிழ் பிரபாவுக்கும் எனக்கும் பெரிய டிஸ்கஷன் நடந்துச்சு.
விக்ரம் மாதிரியான நடிகரை நடிக்கவைக்கிறது ரொம்ப சவால இருந்துச்சு. நான் நினைக்கிறதுதான் வரணும்னு ரொம்ப பிடிவாதமா இருந்தேன்… விக்ரம் இப்படி பண்ணலாமான்னு கேட்பாரு… நல்லாதான் இருக்கும். ஆனா, நான் வேண்டாம் நான் சொல்ற மாதிரி பண்ணுங்கன்னு சொல்லுவேன். படம் முடிஞ்சிட்டு அவர் வேற ஷூட் போயிட்டாரு… ஆனா, ‘தங்கலான்' படத்துக்கு ரீ ஷூட் பண்ணனும்னு போய் கேட்டேன்… வந்து நடிச்சிக்கொடுத்தாரு. அவருக்கு ரிப் உடைஞ்சிருந்துச்சு… ஆனாலும், ஸ்டன்ட்ஸ் பண்ணாரு… அவர் நடிக்கும்போது ஆக்ஷன்னு சொல்லிட்டு அவரையே பார்க்காம மானிட்டர் மட்டும்தான் பார்ப்பேன். கட்னு சொல்லிட்டு கீழே குனிஞ்சிப்பேன். அசிஸ்டென்ட்ஸைக் கூப்பிட்டு அவர் ஒகேவான்னு கேளுங்கன்னு சொல்லுவேன்… பண்ணலாம்னு சொல்றார்னு சொன்னதும் ஒன் மோர் போலாம்னு சொல்லுவேன். விக்ரமை நான் ரொம்பவே கொடுமைப்படுத்தினேன்’’ என விழாவில் பேசினார் பா.இரஞ்சித்!