''பா.இரஞ்சித் ஒரு ராணுவத்தை நடத்துகிறார்... அதில் நான் ஒரு வீராங்கனை'' - ‘தங்கலான்’ பார்வதி
பா. இரஞ்சித் இயக்கத்தில் நடிகர்கள் விக்ரம், பார்வதி, மாளவிகா மோகனன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் ‘தங்கலான்’ திரைப்படம் வரும் ஆகஸ்ட் 15 அன்று வெளியாகிறது. இதனால், படத்தின் புரோமோஷன் வேலைகளை படக்குழு விறுவிறுப்பாகத் தொடங்கி இருக்கிறது. நேற்று மாலை படக்குழுவினர் அனைவரும் கலந்து கொள்ள சென்னையில் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் நடிகை பார்வதியின் பேச்சு இணையத்தில் ரசிகர்களின் கவனம் ஈர்த்துள்ளது.
அவர் பேசியதாவது, “இயக்குநர் பா.இரஞ்சித்துடன் இணைந்து பணிபுரிய வேண்டும் என்பது என் நீண்ட நாள் ஆசை. அது ‘தங்கலான்’ படம் மூலமாக நிறைவேறியது மகிழ்ச்சி. இந்தப் படத்தில் என்னுடைய கங்கம்மா கதாபாத்திரத்தில் இருந்து இன்னும் நான் வெளியே வரவில்லை. இந்தப் படத்திற்கு நடிகர் விக்ரம் சிறப்பான உழைப்பைக் கொடுத்துள்ளார். படம் பார்க்கும்போது நிச்சயம் அதை புரிந்து கொள்வீர்கள். படப்பிடிப்பின்போது இயக்குநர் இரஞ்சித்தின் அம்மாவும், சகோதரியும் எங்களுக்கு உணவு செய்து வருவார்கள். அதோடு ஊட்டியும் விடுவார்கள்” என்றார்.
மேலும், “சினிமா என்பது பொழுதுபோக்கு ஊடகம்தான். இங்கே அரசியல் இல்லாமல் எதுவும் இல்லை. ’தங்கலான்’ திரைப்படம் ஆகஸ்ட் 15-ம் தேதி வெளியாவது என்பது எதேச்சையாக நடக்கவில்லை. நாம் எல்லோரும் சுதந்திரம், ஆதிக்கம் என்ற வார்த்தையை எளிதாகப் பயன்படுத்துகிறோம். இன்னும் நம் சமூகத்தில் ஏன் சமத்துவமின்மை நிலவுகிறது என்பதைத் தொடர்ந்து படித்துக் கொண்டே இருக்க வேண்டும். அதை நம் மனம் ஏற்றுக் கொள்ள மறுக்கிறது என்றால், அதுதான் அரசியல் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். கலை எப்போதும் அரசியலுக்கானது. இரஞ்சித் இந்த கலை வழியே ஒரு இராணுவத்தை நடத்திக் கொண்டிருக்கிறார். அதில், நானும் ஒரு வீராங்கனை என்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்றார்.