நடிகர் மோகன்லால் பற்றி அவதூறு பேச்சு... பிரபல யூடியூபர் கைது!
கடந்த வாரம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு இந்தியாவையே உலுக்கியது. பல நூறு உயிர்கள் அந்த பெருவெள்ளத்திலும் நிலச்சரிவிலும் பலியாகின. பல மாநில அரசுகளும் பொதுமக்களும் திரைத்துறையினரும் தங்களால் முடிந்த நிதியுதவியை கேரளாவுக்கு வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட பகுதிகளை நடிகர் மோகன்லால் கடந்த வாரம் பார்வையிட்டார். பிராந்திய ராணுவத்தில் லெப்டினன்ட் கர்னலாக அவர் இருப்பதால் அந்த உடையிலேயே அவர் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு நிவாரணத்தொலையாக ரூ. 3 கோடி கொடுத்தார்.
இதை திருவல்லாவைப் பூர்விகமாகக் கொண்ட பிரபல யூடியூபர் அஜு அலெக்ஸ் விமர்சித்துள்ளார். இவர் 'செகுதான்' என்ற பெயரில் யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார். இதில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கும் யூடியூபர் அஜூ, மோகன்லால் மற்றவர்களின் நேரத்தை வீணடிப்பதற்காக அங்கு வந்ததாகவும், அவருக்கு சுய மரியாதை இல்லை என்றும் கூறியிருக்கிறார்.
இது மலையாளத் திரையுலகில் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. அஜூ மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மலையாள திரைப்பட கலைஞர்கள் சங்கத்தின் (அம்மா) பொதுச் செயலாளரான நடிகர் சித்திக் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.