அனிருத் ரசிகர்களுக்காக இப்படி ஒரு பாடலா ஏ.ஆர்.ரஹ்மான்? Raayan Rumble பாடல் விமர்சனம்!
தனுஷ் இயக்கி நடித்திருக்கும் அவரது 50-வது படமான ‘ராயன்' வரும் ஜுலை 26-ம் தேதி ரிலீஸாக இருக்கிறது. அதற்கு முன்பாக இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடக்க இருக்கிறது. இதற்கிடையே ‘ராயன்' ஆல்பத்தில் இருந்து மூன்றாவது பாடலாக நேற்றிரவு வெளிவந்தது Raayan Rumble பாடல். ‘’அடங்காத அசுரன்’’, ‘’வாட்டர் பாக்கெட்'’ பாடல்களுக்கு நல்ல வரவேற்பு இருந்த நிலையில் ராப் பாடலாக வெளிவந்திருக்கிறது ராயன் ரம்பில்.
ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ‘’ரூட்டு இது ரூட்டு இனி வெக்கப்போறான் வேட்டு… ஜூட்டு அடி ஜூட்டு நீ யாருனுதான் காட்டு’’ என பாடலை எழுதிப் பாடியிருக்கிறார் ரேப்பர் அறிவு. ராயன் ரம்பில் என இந்தப்பாடலுக்குத் தலைப்பிடப்பட்டிருக்கிறது. தூரத்தில் தொடர்ந்து ஒலித்துக்கொண்டேயிருக்கும் சத்தத்தைத்தான் ரம்பிள் எனச்சொல்வார்கள். அப்படி ரம்பிளாக இருக்கிறதா பாடல்?!
'’காட்டாறு காட்டாறு காட்டாறுடா… தோக்காது தோக்காது தோக்காதுடா’’ என்கிற இடம் வரும்போதுதான் இது ஏ.ஆர்.ரஹ்மான் இசையோ என்கிற எண்ணத்தைத் தருகிறது. மற்றபடி பாடல் முழுக்க இரைச்சலாக இருப்பதுபோன்ற எண்ணமே எழுகிறது. பாடல் வரிகளுக்கும், இசைக்கும் ஒரு சிங்க் இருப்பது போன்ற உணர்வு எழவில்லை. அனிருத் இசையை அதிகம் ரசிக்கும் இன்றைய தலைமுறை இளைஞர்கள் இப்படித்தான் எதிர்பார்க்கிறார்கள் என ஏ.ஆர்.ரஹ்மான் தன் பாதையில் இருந்து விலகி இசையமைத்திருக்கும் பாடலாக இருக்கிறது.
‘’ராங்கானவன், ரேஜ் ஆனவன், தீங்கானவன்’’ எனப்பாடல் வரிகள் வழக்கமான அறிவின் பாடல்களில் கேட்டுப் பழகிய வரிகளாக இருக்கின்றன.
ராயல் ரம்பில் அனிருத் ரசிகர்களுக்குப் பிடித்த ஏ.ஆர்.ரஹ்மான் பாடலாக அமையலாம். மற்றபடி கொண்டாட, ரசிக்க, சிலிர்க்க இந்தப்பாடலில் எதுவும் இல்லை!