தேசிய விருது பெற்ற டான்ஸ் மாஸ்டர் மீது பாலியல் குற்றச்சாட்டு... நடனக் கலைஞர் புகார்!
‘புட்டபொம்மா’, ‘அரபிக்குத்து’, ’காவாலா’ போன்ற பல ஹிட் பாடல்களுக்கு டிரெண்டிங் நடனம் அமைத்தவர் டான்ஸ் மாஸ்டர் ஜானி. தனுஷ் நடிப்பில் வெளியான ‘திருச்சிற்றம்பலம்’ படத்தில் இடம்பெற்ற ‘மேகம் கருக்காதா பெண்ணே’ பாடலுக்காக இவருக்கு சமீபத்தில் தேசிய விருது அறிவிக்கப்பட்டது. இந்த சாதனைகளைப் போலவே சர்ச்சைகளுக்கும் பஞ்சமில்லாதவர் ஜானி மாஸ்டர். கடந்த 2019-ம் ஆண்டு நடனக் கலைஞர் சதீஷ் என்பவர் கொடுத்த பாலியல் புகார் காரணமாக 6 மாதங்கள் சிறை தண்டனை அனுபவித்தார்.
இப்படியான சூழ்நிலையில்தான் இவர் மீது 21 வயது பெண் நடனக் கலைஞர் ஒரு பாலியல் தொல்லை புகார் கொடுத்திருக்கிறார். இவர் ஜானியின் நடனக்குழுவில் உள்ள ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. சென்னை, மும்பை மற்றும் ஹைதராபாத் ஆகிய இடங்களில் வெளிப்புற படப்பிடிப்பிற்கு சென்றபோது ஜானி மாஸ்டர் பலமுறை அந்தப் பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக புகாரில் சொல்லப்பட்டுள்ளது.
சைபராபாத்தில் உள்ள ராய்துர்கம் காவல்துறையில் இது தொடர்பான வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. முதலில் ராய்துர்கத்தில் ஜீரோ எப்ஐஆராக பதிவு செய்யப்பட்ட வழக்கு, பின்பு விசாரணைக்காக நரசிங்கி போலீஸாருக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த விஷயம் திரைத்துறையில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.