ரஜினிகாந்த்தின் மகளாக ஸ்ருதி ஹாசன்… ஐதராபாத்தில் ‘கூலி' ஷூட்டிங்கைத் தொடங்கிய லோகேஷ் கனகராஜ்!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் ‘கூலி' படத்தின் ஷூட்டிங் இன்று ஐதராபாத்தில் தொடங்கியிருக்கிறது. லோகேஷ் கனகராஜின் ஆறாவது படமான ‘கூலி' தமிழகத்தின் தென் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு கூலிப்படைத் தலைவனின் கதை. கமல்ஹாசனின் மகளான ஸ்ருதி ஹாசன் ‘கூலி' படத்தில் ரஜினிகாந்த்தின் மகளாக நடிக்க இருக்கிறார்.
அனிருத் இசையமைத்திருக்கும் இந்தப்படத்தின் ஷூட்டிங் இன்று முதல் 25 நாட்களுக்கு ஐதராபாத்தில் நடிக்க இருக்கிறது. படத்தில் நடிக்கும் எல்லா நடிகர்களும் தேர்வுசெய்யபட்டுவிட்டார்கள். டிவி சீரியல், யு-ட்யூப் பிரபலங்கள் பலரும் ‘கூலி'யில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார்கள்.
லோகேஷின் 'கைதி', 'மாஸ்டர்', 'விக்ரம்', 'லியோ' படங்களுக்கு இணை எழுத்தாளராகப் பணியாற்றிய ரத்னகுமாருக்கு பதிலாக 'கூலி' படத்தின் இணை எழுத்தாளாராக சந்துரு அன்பழகன் இணைந்திருக்கிறார். இவர்தான் லோகேஷின் முதல்படமான 'மாநகரம்' படத்தின் இணை எழுத்தாளர். திரைக்கதை, வசனங்களை லோகேஷுடன் இணைந்து எழுதியவர்.
'லியோ' படத்தின்போது லோகேஷுக்கும், விஜய்க்கும் இடையே ஏற்பட்ட விரிசலில் இணை இயக்குநரும், எழுத்தாளருமான ரத்னகுமார் விஜய் பக்கம் சாய்ந்ததில் லோகேஷுக்கு வருத்தம். அதனால்தான் ரத்னகுமார் 'கூலி'யில் இல்லை என்கிறார்கள் லோகேஷுக்கு நெருக்கமானவர்கள்.
அன்பறிவு ஸ்டன்ட்ஸை கவனிக்க, கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவாளராக 'கூலி' படத்தில் அசத்தயிருக்கிறார்.
படத்தின் அதிகாரப்பூர்வ நடிகர்கள் லிஸ்ட் இன்று மாலை வெளியாகும் என எதிர்பார்க்கலாம்!