மகனுடன் மனோ
மகனுடன் மனோ

குடிபோதையில் அடிதடி... பாடகர் மனோ மகன்கள் மீது போலீஸில் புகார்!

குடிபோதையில் பிரபல பின்னணிப் பாடகர் மனோவின் மகன்கள் இருவரும் தங்கள் நண்பர்களுடன் சேர்ந்து தகராறில் ஈடுபட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
Published on

’செண்பகமே’, ’முக்காலா’ உள்ளிட்ட ஏராளமான ஹிட் பாடல்களை தமிழ் சினிமாவில் பாடியவர் மனோ. இவரது இரண்டு மகன்கள் சாஹீர் மற்றும் ரஃபி இருவரும் நேற்று இரவு குடிபோதையில் தங்கள் நண்பர்களுடன் சேர்ந்து இளைஞர்கள் இரண்டு பேரை அடித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

சென்னை ஆலப்பாக்கத்தை சேர்ந்தவர் கிருபாகரன் (20) மற்றும் மதுராவாயல் பகுதியை சேர்ந்த ஐடிஐ மாணவர் நிதிஷ் (16). நேற்று இரவு இவர்கள் இருவரும் வளசரவாக்கம், ஸ்ரீதேவி குப்பம் அருகில் உள்ள உணவகம் ஒன்றிற்கு உணவு வாங்க சென்றிருக்கின்றனர். அப்போது அவர்களை வழிமறித்த ஐந்து பேர் கொண்ட கும்பல் அவர்களிடம் தகராறு செய்திருக்கிறது.

ஒருக்கட்டத்தில் வாக்குவாதம் முற்றிப் போகவே, கிருபாகரன் மற்றும் நிதிஷ் இருவரையும் முட்டிப்போட வைத்து கட்டையால் அடித்திருக்கிறார்கள். இதில் கிருபாகரனின் பின்னந்தலையில் அடிபட்டுள்ளது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் இருவரையும் மீட்டு கீழ்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்திருக்கின்றனர்.

தாக்கிய ஐந்து பேர் பற்றிய விவரங்களை காவல்துறையினர் சேகரித்தபோது அதில் பாடகர் மனோவின் மகன்கள் சாஹீர் மற்றும் ரஃபியும் இருந்திருக்கிறார்கள். இதுபற்றி காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மனோவின் மகன்கள் தலைமறைவாக இருப்பது குறிப்பிடத்தக்கது!

logo
News Tremor
newstremor.com