மறைந்த பாடகர் SPB வாழ்ந்த தெருவின் பெயரை மாற்றவேண்டும் : முதல்வரிடம் கோரிக்கை மனு!
இந்திய சினிமா ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம். தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட இந்திய மொழிகளில் சுமார் 4,000-க்கும் அதிகமான பாடல்களைப் பாடியிருக்கிறார். தேசிய விருதுகள், பத்மஸ்ரீ, பத்ம பூஷன் உட்பட பல விருதுகளை வாங்கியுள்ளார்.
எம்.ஜி.ஆர்., சிவாஜி, ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆரம்பித்து இந்தத் தலைமுறையில் உள்ள பல கதாநாயகர்களுக்கும் அற்புதமான பல ஹிட் பாடல்களைக் கொடுத்திருக்கிறார் எஸ்.பி.பி. ‘பாடும் நிலா’ என்றழைக்கப்பட்ட இவர் பாடல்கள் பாடுவது மட்டுமல்லாது நடிப்பு, தயாரிப்பு, இயக்கம் என பன்முகத் திறமையாளராகத் திகழ்ந்தார்.
ஆனால், கடந்த 2020-ம் ஆண்டு கொரோனா சமயத்தில் சிகிச்சை பெற்று வந்தவர் சிகிச்சை பலனின்றி காலமானார். இந்நிலையில் சென்னை நுங்கம்பாக்கத்தில் எஸ்.பி.பி. காம்தார் நகரில் வாழ்ந்தார். இந்தநிலையில், அவரது நினைவை போற்றும் வகையில், ‘எஸ்.பி.பாலசுப்ரமணியம் நகர்’ என அந்தத் தெருவுக்கு பெயர் மாற்ற வேண்டும் என அவரது மகன் சரண் முதலமைச்சர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்துள்ளார்.