‘புறநானூறு’ படத்தில் இருந்து விலகிய சூர்யா… தனுஷ் கால்ஷீட்டை கேட்கும் சுதா கொங்கரா!
நடிகர் சூர்யாவுக்கு சமீபத்தில் மிகப்பெரிய ஹிட் கொடுத்தப்படம் ‘சூரரைப் போற்று'. ஓடிடி ரிலீஸாக வெளியான இந்தப்படம் விமர்சனமாகவும், வியாபாரமாகவும் சூர்யாவுக்கு கைக்கொடுத்தது. இதனால் இதன் இந்தி ரீமேக்கை சூர்யாவே தயாரிக்க, சுதா கொங்கரா இயக்க, அக்ஷய் குமார் நடித்திருக்கிறார். 'Sarfira' எனப் பெரியரிடப்பட்டிருக்கும் இந்தப்படம் 'இந்தியன் 2' ரிலீஸாக இருக்கும் ஜூலை 12-ம் தேதி இந்தியா முழுக்க ரிலீஸாக இருக்கிறது.
இந்நிலையில் சூர்யாவும், சுதா கொங்கராவும் தமிழில் ‘புறநானுறு' என்கிற படத்தின் மூலம் இணைவதாக கடந்த ஆண்டே அறிவிப்பு வெளியிட்டார்கள். ஆனால், இந்தப்படம் லுக் டெஸ்ட் ஷூட்டோடு அடுத்தக்கட்டம் நோக்கி நகரவில்லை.
கடந்த மார்ச் 18-ம் தேதி சூர்யாவும், சுதாவும் இணைந்து அதிகாரப்பூர்வமாக ‘’ 'புறநானூறு' படத்திற்கு இன்னும் கொஞ்சம் நாள் தேவைப்படுகிறது. விரைவில் ஷூட்டிங் போவோம்'’ என அறிவித்தார்கள். ஆனாலும் ‘வாடிவாசல்' போலவே போஸ்டர் அறிவிப்போடு படம் ஷூட்டிங் போகாமல் நின்றுவிட்டது. இதனால் கார்த்திக் சுப்பராஜுக்கு டேட் கொடுத்து அந்தமானில் அடுத்தப்படத்தின் ஷூட்டிங்கிற்கு போய்விட்டார் சூர்யா.
அடுத்து அக்டோபர் மாதத்தில் இருந்து ‘வாடிவாசல்' படத்தில் சூர்யா நடிக்க இருக்க, 'புறநானுறு' என்னாச்சு என விசாரித்தோம். சூர்யாவுக்கும், சுதா கொங்கராவுக்கும் இடையே ஸ்கிரிப்ட்டில் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக சூர்யா விலகிவிட்டார் என்கிறார்கள். இந்தப்படத்தின் தயாரிப்பாளரும் சூர்யாதான் என்கிற நிலையில் சூர்யா விலகினாலும் 'புறநானூறு' படத்தை சுதா விடுவதாக இல்லை. வேறு தயாரிப்பு நிறுவனம் மூலம் தனுஷை நடிக்கவைக்க பேச்சுவார்தைகள் நடந்துகொண்டிருக்கிறது. சூர்யா விலகிய படத்தில் தனுஷ் நடிக்க ஒத்துக்கொள்வாரா என்பதில் இன்னும் சஸ்பென்ஸ் நீடிக்கிறது.