‘தங்கலான்’, ‘கங்குவா’, ‘அமரன்'... ஏன் எந்த டிவி சேனலும் வாங்காமல் தவிர்க்கின்றன?
தமிழ் சினிமா உலகைப்பொருத்தவரை தியேட்டர் ரைட்ஸ் விற்பது எவ்வளவு மிக்கியமோ அதேப்போல் சேட்டிலைட் டிவி ரைட்ஸ் விற்பதும் மிக மிக முக்கியம். ஏனென்றால் தியேட்டர்களில் இருந்து கிடைக்கும் பணத்துக்கு இணையாக டிவி ரைட்ஸில் இருந்தும் தயாரிப்பாளருக்குப் பெரும் பணம் கிடைக்கும். இதனால் ஒரு தயாரிப்பாளர் ஒரு நடிகரை வைத்துப் படத்தை தயாரிக்கும்போதே தியேட்டர் ரைட்ஸ், டிவி ரைட்ஸ், ஓடிடி ரைட்ஸ் என எல்லாம் கலந்தே கணக்குப்போடுவார். ஆனால், தமிழ் சினிமாவில் சமீபத்திய மாற்றமாக பெரிய நடிகர்களின் படங்களையே டிவி சேனல்கள் புறக்கணிக்க ஆரம்பித்துவிட்டன. காரணம் ஓடிடி தளங்கள்
நெட்ஃபிளிக்ஸ், அமேசான் ப்ரைம், ஹாட்ஸ்டார் என ஓடிடி நிறுவனங்கள் பெரிய நடிகர்களின் படங்களை போட்டிப்போட்டுக்க்கொண்டு வாங்குகின்றன. இவர்கள் படம் தியேட்டரில் ரிலீஸ் ஆன 6-வது வாரத்தில் தங்கள் தளங்களில் ஒளிபரப்ப ஆரம்பித்துவிடுகிறார்கள். இப்போது கிராமங்களுக்கே ஸ்மார்ட் டிவிக்கள் வந்துவிட்டதால் படங்களை ஓடிடி தளங்களிலேயே மக்கள் பார்த்துவிடுகிறார்கள். இதனால் படங்களை டிவி சேனல்கள் ஒளிபரப்பும்போது அதற்கான டிஆர்பி மிகவும் குறைவாக வருகிறது. டிஆர்பி குறைந்தால் விளம்பர வருமானம் குறையும். இதனால் பெரிய படங்களை 20 கோடி 40 கோடி எனப் பணம் கொடுத்து வாங்கும் டிவி சேனல்கள் பெருத்த நஷ்டத்தை சந்திக்கின்றன. இந்த நஷ்டத்தை தவிர்க்கவே டிவி சேனல்கள் பெரிய படங்களை வாங்குவதைத் தவிர்க்கின்றன.
விஜய் படங்களை எப்போதுமே சன் டிவி போட்டிப்போட்டுக்கொண்டு வாங்கும். விஜய்யின் கரியரில் ‘மெர்சல்’ உள்ளிட்ட ஒரு சில படங்களே மற்ற சேனல்களுக்குப் போயிருக்கின்றன. இந்நிலையில்தான் சன் டிவி ‘GOAT’ படத்துக்கு குறைவான விலையை சொல்ல, ஏஜிஎஸ் நிறுவனம் படத்தை ஜீ தமிழுக்கு விற்றுவிட்டது. ஜீ நிறுவனமுமே தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மார்க்கெட்டையுமே பிரதானமாக வைத்தே படத்தை வாங்கியிருக்கிறது.
இந்தச் சூழலில் தமிழில் விக்ரமின் ‘தங்கலான்', சூர்யாவின் ‘கங்குவா’, சிவகார்த்திகேயனின் ‘அமரன்' என மூன்று பெரிய பட்ஜெட் படங்களுமே டிவி ரைட்ஸில் விலைபோகவில்லை. ‘தங்கலான்' தியேட்டர்களில் ரிலீஸே ஆகிவிட்டது என்பதால் இதன்பிறகு டிவி ரைட்ஸ் யாரும் வாங்குவது சந்தேகேமே. இந்நிலையில் கங்குவாவின் டிவி ரைட்ஸுமே விலை போகாததால் ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்துக்கு டிவி மூலம் வரவேண்டிய லாபம் ஒன்றும் இல்லாமல் போய்விட்டதாக சொல்கிறார்கள்.
அதேப்போல் சிவகார்த்திகேயன் படங்களுக்கு பொதுவாகவே டிவி மார்க்கெட் உண்டு. ஆனால், அப்படியிருந்துமே ‘அமரன்’ படத்தை விற்கமுடியவில்லை. இத்தனைக்கும் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் நிறுவனம்தான் இந்தப்படத்தின் தியேட்டர் உரிமையை வாங்கியிருக்கிறது. பொதுவாக ரெட் ஜெயன்ட் ரிலீஸ் செய்யும் படங்களை கலைஞர் டிவி வாங்கும். ஆனால், ‘அமரன்' படத்தை ஏனோ கலைஞரும் வாங்கவில்லை.
‘’தயாரிப்பு நிறுவனங்கள் ஓடிடி வந்தபிறகும், டிவி சேனல்களிடம் இருந்து பெரும் பணத்தை எதிர்பார்ப்பதுதான் பிரச்சனை. டிஆர்பி-யே வராத படங்களை வாங்கினால் சேனல்களுத்தான் பெருத்த நஷ்டம்’’ என்கின்றன டிவி நிறுவனங்கள்.