''நீண்ட ஆயுளோடு வாழ பிரார்த்திக்கிறேன்'' - பிரதமர் மோடியை வாழ்த்திய விஜய்!
பிரதமர் மோடி இன்று தனது 74ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். அரசியல் தலைவர்களும் பாஜக தொண்டர்களும் மோடிக்கு தங்களது வாழ்த்தைத் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், தவெக தலைவர் விஜயும் தனது வாழ்த்தை மோடிக்கு தெரிவித்திருக்கிறார்.
இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில், ‘மாண்புமிகு இந்திய பிரதமர் மோடி அவர்களுக்கு எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். நீண்ட ஆயுளோடும் ஆரோக்கியத்தோடும் மகிழ்ச்சியுடனும் வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்’ எனப் பதிவிட்டுள்ளார்.
தவெக கட்சி தொடங்கியதில் இருந்து, அரசியல் தலைவர்களின் பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்வதை வழக்கமாக வைத்திருக்கிறார் விஜய் என்பது குறிப்பிடத்தக்கது. இதுமட்டுமல்லாது, விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து சொல்லாததால் திமுகவின் பி டீம்தான் தவெக என்ற விமர்சனம் கிளம்பியது. இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாகதான் விஜய் இப்போது மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லியிருக்கிறார் என்றும் இணையவாசிகள் சொல்லி வருகின்றனர்.