மகிழ்ச்சியின் மாமன்னன், சிரிப்பின் சக்கரவர்த்தி, நகைச்சுவையின் நாயகன்! #HBDVadivelu
மக்களின் முகத்தில் சிரிப்பையும், கண்ணீரையும் ஒரே நேரத்தில் வரவழைக்கக்கூடிய உன்னதக் கலைஞன் வடிவேலு. கடைசியாக ‘மாமன்னன்' மண்ணுவாக அவர் தந்த நடிப்பு அசாத்தியமானது. ஈடு இணையற்றது.
மதுரையில் மிகவும் எளிமையான குடும்பத்தில் பிறந்து, உலகத் தமிழர்கள் கொண்டாடும் மாபெரும் நகைச்சுவை மாமன்னனாக உயர்ந்து நிற்கிறார் வடிவேலு. எல்லா நடிகர்களுக்குமே ஒரு ரசிகர் கூட்டம் இருக்கும். ஆனால் வடிவேலுவுக்கு மட்டுமே தமிழ்த்தெரிந்த அத்தனை மனிதர்களும் ரசிகர்களாக இருக்கிறார்கள். தலைமுறைகளைக் கடந்தும் நகைச்சுவை மன்னனாக உயர்ந்து நிற்கிறார் வடிவேலு.
வாழ்க்கையின் ஒவ்வொரு தருணத்துக்கும் வடிவேலு பொருந்தி நிற்கிறார் என்பதால்தான் அவர் எல்லாதரப்பட்ட மக்களுக்கும் மகிழ்ச்சி தரும் நாயகனாக இருக்கிறார். சமூக வலைதளங்களில் அதிகம் தேடப்படுவது "வடிவேலு மீம்ஸ்", "வடிவேலு காமெடி" போன்றவைகள்தான்.
"வடிவேலு ஃபார் லைஃப்" என உலக டிரெண்ட் ஆக்கும் அளவுக்கு இந்தத் தலைமுறையினரிடமும் புகழ்பெற்று விளங்குகிறார் வடிவேலு. தமிழ் சினிமா வடிவேலுவுக்கு கொடுத்திருக்கும் இடம் இதுவரை யாருக்கும் கிடைக்காத இடம். அதேப்போல் வடிவேலு நடித்த கதாபாத்திரங்களும், அவர் பேசி நடித்த வசனங்களும் மக்கள் மத்தியில் காலத்தால் அழிக்கமுடியாத பொக்கிஷங்களாக இருக்கின்றன. இவருடைய கதாபாத்திரங்களில் பிரபலமான நாய் சேகர், கைப்புள்ள, சூனா பானா, டெலக்ஸ் பாண்டியன் ஆகியவை எப்போதும், யாராலும் ரீ-கிரியேட் செய்யமுடியாதவை.
சந்தோஷமோ, கவலையோ, மன அழுத்தமோ… வடிவேலு இருக்கிறார் மக்களே… இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் மகிழ்ச்சியின் மாமன்னா!