சுசித்ரா குற்றச்சாட்டுகளுக்கு வைரமுத்து மறைமுக பதில் : ''மனநோயால் பாதிப்பு'' என குற்றச்சாட்டு!
பாடகி சுசித்ரா கடந்த சில வாரங்களுக்கு முன் கவிஞர் வைரமுத்து தனக்கு கிஃப்ட் கொடுப்பதாக தனியாக அழைத்தார். பாட்டியோடு போன என்னைப் பார்த்து அதிர்ந்து ஷாம்பு பாட்டில் கொடுத்து அனுப்பினார் என பேட்டியளித்தார். இந்தப் பேட்டி வைரலாகி பேன்ட்டீன் முத்து என வைரமுத்துவை சமூக வலைதளங்களில் கிண்டல் அடிக்கத்தொடங்கினார்.
இதற்கு பதில் அளிக்கும் விதமாக வைரமுத்து தனது சமூக வலைதள பக்கத்தில் இன்று ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அதில் ''வாழ்வியல் தோல்விகளாலும் பலவீனமான இதயத்தாலும் நிறைவேறாத ஆசைகளாலும் மன அழுத்தத்திற்கு உள்ளாகி அதன் உச்சமாய் மூளைப் பிறழ்வுக்கு ஆளாகும் சிலர் ஒருதலையாய் நேசிக்கப்பட்டவர்கள்மீது வக்கிர வார்த்தைகளை உக்கிரமாய் வீசுவர்; தொடர்பற்ற மொழிகள் பேசுவர். பைத்தியம்போல் சிலநேரமும் பைத்தியம் தெளிந்தவர்போல் சிலநேரமும் காட்சியளிப்பர்.
தம்மைக் கடவுள் என்று கருதிக்கொள்வர் இந்த நோய்க்கு ‘Messianic Delusional Disorder’ என்று பெயர். அவர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் அல்லர்; இரக்கத்திற்குரியவர்கள்; அனுதாபத்தால் குணப்படுத்தக் கூடியவர்கள் உளவியல் சிகிச்சையும் மருந்து மாத்திரைகளும் உண்டு உரிய மருத்துவர்களை அணுக வேண்டும்'' என்று எழுதியிருக்கிறார்.
சுசித்ராவை பைத்தியம் என அவர் எழுதியிருப்பதற்கு கடுமையான எதிர்வினைகள் சமூகவலைதளங்களில் எழுந்திருக்கிறது!