சிஐடி சகுந்தலா
சிஐடி சகுந்தலா

சிஐடி சகுந்தலா : நடன மேடை முதல் சினிமா வரை ஆளங்கரித்த ஆளுமை மறைந்தது!

பழம்பெரும் நடிகை சிஐடி சகுந்தலா (84) காலமானார். இவரது மறைவுக்கு திரையுலகைச் சேர்ந்த பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
Published on

சேலத்தை சேர்ந்தவரான நடிகை சகுந்தலா நடிகர் ஜெய்ஷங்கர் நடிப்பில் வெளியான ‘சிஐடி ஷங்கர்’ படம் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இதனால், ரசிகர்கள் மத்தியில் சிஐடி சகுந்தலா என்று பரவலாக அறியப்படுகிறார். நடிகைகள் லலிதா, பத்மினி, ராகினி உள்ளிட்டோர் நடத்தி வந்த நடன நாடகங்களில் நிகழ்ச்சிகள் மற்றும் பாடல்களுக்கு நடனம் ஆடி வந்தார் சகுந்தலா. அவரது துள்ளலான நடனமும் அழகிய முகபாவனைகளும் அப்போது ரசிகர்களைக் கவர்ந்தது. இதுதான் அவர் சினிமாவில் நுழைவதற்கான திறவுகோலாக அமைந்தது.

தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் 600-க்கும் மேற்பட்ட படங்களில் அவர் நடித்தார். ‘வசந்த மாளிகை’, ‘தில்லானா மோகனாம்பாள்’ உள்ளிட்டப் பல படங்களில் சிவாஜி, எம்.ஜி.ஆர் உள்ளிட்ட முன்னணி கதாநாயகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்தார். எம்ஜியாரையே வில்லியாக விரட்டியவர். நடிகர் சங்கத்தில் செயற்குழு உறுப்பினராகவும் பதவி வகித்திருக்கிறார்.

ஒரு காலகட்டத்தில், சினிமாவிலிருந்து ஒதுங்கிய பிறகு சீரியல் பக்கம் வந்தார். பின்னர், நடிப்பிற்கும் ஓய்வு கொடுத்து பெங்களூருவில் மகள் வீட்டில் வசித்து வந்தார். வயது மூப்பு காரணமாக அவருக்கு நேற்று நெஞ்சுவலி ஏற்பட அங்கிருக்கும் தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்கு சேர்த்திருக்கிறார்கள். ஆனால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சில நிமிடங்களிலேயே அவர் காலமாகியுள்ளது சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. தென்னிந்திய நடிகர் சங்கம் மற்றும் திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் இவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
logo
News Tremor
newstremor.com