விஜய் போட்ட கண்டிஷன்… வெங்கட் பிரபுவைத் தவிர யாரும் GOAT பற்றி பேசக்கூடாது… ஏன்?
விஜய்யின் திரைவாழ்வில் 68-வது படமாக செப்டம்பர் 5-ம் தேதி வெளியாகிறது GOAT என்கிற 'கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்' என்கிற படம். இன்று முதல் படத்துக்கான டிக்கெட் புக்கிங் தொடங்கியிருக்கும் நிலையில் படத்துக்கான ப்ரமோஷன் இன்னும் மந்த நிலையிலேயே உள்ளது.
பொதுவாகவே விஜய் படங்கள் ரிலீஸாகும்போது அதில் நடித்திருக்கும் நடிகர்கள், டெக்னீஷயன்ஸ், ஸ்டன்ட் மாஸ்டர், டான்ஸ் மாஸ்டர் என எல்லோருமே டிவி, பத்திரிகை, யூடியுப் என அத்தனை மீடியாவுக்கும் வரிசைகட்டி பேட்டிகள் தருவார்கள். ஆனால், GOAT படத்துக்கு அப்படி எந்த வைபவமும் இதுவரை நடக்கவில்லை. ட்ரெய்லர் வெளியான அன்று நடந்த ஒரேயொரு பிரஸ்மீட்டைத் தவிர எந்த சிறப்பு நிகழ்வும் நடக்கவில்லை.
இத்தனைக்கும் GOAT படத்தில் விஜய் தவிர ‘மைக்' மோகன், பிரசாந்த், பிரபுதேவா,ஸ்னேகா, மீனாட்சி செளத்ரி எனப் பலரும் நடித்திருக்கிறார்கள்.யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். ஆனால், யாரும் இதுவரை எந்தப் பேட்டியும் தரவில்லை. இதற்கிடையே நேற்று நடைபெறுவதாக இருந்த வெங்கட்பிரபு பத்திரிகையாளர் சந்திப்பும் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது.
இந்த அமைதிக்கு என்ன காரணம் என GOAT படக்குழுவினரிடம் விசாரித்தோம். ‘’விஜய் சார் இயக்குநர் வெங்கட் பிரபுவைத் தவிர GOAT படம் பற்றி யாரையும் பேசக்கூடாது எனச்சொல்லியிருக்கிறார். படத்துக்கு தேவையில்லாத ஹைப் கொடுக்கவேண்டாம். பட ரிலீஸுக்குப்பிறகு எல்லோருமே மீடியாக்களிடம் பேசலாம் எனச்சொல்லியிருக்கிறார்’’ என்கிறார்கள்.
விஜய்யின் இந்த கட்டுப்பாட்டுக்கு இரண்டு விஷயங்கள் முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது. முதல் விஷயம் எதிர்பார்ப்பு அதிகமானால் அதுவே படத்துக்கு பாதிப்பாக அமையலாம் என்பது. இரண்டாவது படத்தில் பல்வேறு சஸ்பென்ஸ்கள் இருப்பதால் யாராவது பேட்டிகளில் சஸ்பென்ஸை உடைத்துவிட்டால் அது சிக்கலாகிவிடும் என்பதாலும் விஜய் யாரையும் பேட்டி தரவேண்டாம் எனச்சொல்லியிருப்பதாகச் சொல்கிறார்கள்.