விஜய்யின் ‘GOAT’ திட்டமிட்டபடி செப்டம்பர் 5 ரிலீஸ்… ஆகஸ்ட் 1 யுவனின் இசையில் மூன்றாவது சிங்கிள்!
விஜய் நடிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளிவர இருக்கும் ‘GOAT’ படத்துக்கான எதிர்பார்ப்பு பெருமளவில் கூடியிருக்கிறது. இந்த ஆண்டு இதுவரை வெளியான படங்களில் ‘மகாராஜா’, ‘கருடன்' படங்களைத் தவிர்த்து தமிழ் சினிமாவுக்கு வியாபார ரீதியாக வெற்றிகரமான படங்கள் எதுவும் அமையவில்லை. கமல்ஹாசன் நடிப்பில் வெளியான ‘இந்தியன் -2’, தனுஷ் இயக்கி நடித்த ‘ராயன்' போன்ற பெரிய படங்கள் கதையில் கோட்டைவிட்டதால் நெகட்டிவ் விமர்சனங்களால் பார்வையாளர்களை, பிசினஸை இழந்துவருகின்றன.
இந்நிலையில் தமிழ் சினிமாவின் வியாபார வெற்றியை உறுதிசெய்யவேண்டிய மிகப்பெரிய பொறுப்பு ‘கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்' எனப்பெயரிடப்பட்டிருக்கும் விஜய் படத்துக்கு வந்திருக்கிறது. இந்நிலையில் ‘எக்ஸ்' தளத்தில் படத்தின் பெயரைக் குறிப்பிடாமல் ''இந்த ஆண்டில் அதிகமாக எதிர்பார்க்கப்படும் படம் VFX பணிகள் இன்னும் முடியாததால் குறிப்பிட்ட நாளில் ரிலீஸ் ஆகாது’’ என அப்டேட் வர, உடனடியாக அதை மறுத்து அப்டேட் கொடுத்திருக்கிறார் படத்தின் தயாரிப்பாளரான அர்ச்சனா கல்பாத்தி.
‘’இந்த தகவல் உண்மையில்லை… குறிப்பிட்ட நாளில் படத்தை ரிலீஸ் செய்ய 24/7 வேலை செய்துகொண்டிருக்கிறோம். தயவுசெய்து நெகட்டிவிட்டியை, வதந்திகளை பரப்பாதீர்கள்’’ என்று குறிப்பிட்டவர், அடுத்த அப்டேட்டிலேயே ‘’ ‘GOAT’ படத்தை டேக் செய்து அந்த அப்டேட் வரவில்லை என்பதை இப்போதுதான் உணர்கிறேன். ஆனால் படம் நிச்சயம் செப்டம்பர் 5-ம் தேதி உலகம் முழுக்க ரிலீஸ் ஆகும்’’ என அப்டேட் கொடுத்திருக்கிறார் அர்ச்சனா.
அதேப்போல் ஆகஸ்ட் 1 அடுத்த அப்டேட் வரும் என முழுமையான தகவலை சொல்லாமல் விட்டிருக்கிறார் அர்ச்சனா. ஆனால், யுவனின் லாங் டிரைவ் கான்செர்ட்டுக்கு முன்பாகவே மூன்றாவது சிங்கிள் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இப்போது ''ஆகஸ்ட் 1 அப்டேட்'' என்கிற அர்ச்சனாவின் குறுஞ்செய்தி மூலம் மூன்றாவது சிங்கிள் ரிலீஸ் ஆகப்போவதை உறுதிப்படுத்திக்கொள்ளலாம்!