‘’சின்ன சின்ன கண்கள்'’... விஜய்யின் G.O.A.T படத்தின் இரண்டாவது பாடல் நாளை ரிலீஸ்!
நாளை (ஜூன் 22) தனது 50-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார் நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய். பிறந்தநாள் ஸ்பெஷலாக GOAT படத்தின் இரண்டாவது சிங்கிளை நாளை ரிலீஸ் செய்கிறது படக்குழு.
வெங்கட் பிரபு இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் ‘கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ எனும் GOAT படத்திலிருந்து கடந்த ஏப்ரல் 14-ம் தேதி முதல் சிங்கிள் வெளியானது. ‘விசில் போடு' என்கிற இந்தப்பாடலுக்கு நல்லவரவேற்பு கிடைத்தாலும் இன்னொருபக்கம் பாடல் சுமார்தான் என்கிற விமர்சனங்களும் எழுந்தது. இந்த விமர்சனங்களுக்கு பதில் சொல்லும் விதமாக நாளை இரண்டாவது பாடலை வெளியிட இருக்கிறார்கள்.
சமீபத்தில் ஒரு நிகழ்சியில் கலந்து கொண்ட இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா GOAT படத்தில் விஜய் இரண்டு பாடல்கள் பாடியிருப்பதாக சொல்லியிருந்தார். ‘விசில்போடு' என முதலில் வெளியான பாடலையும் விஜய்தான் பாடியிருந்தார். அதனால் நாளை வெளியாகவிருக்கும் "சின்ன சின்ன கண்கள்" பாடலும் விஜய் பாடியதாக இருக்குமோ என்ற அவரது ரசிகர்களின் கேள்விக்கு 'இந்தப்பாடலைப் பாடியவர் உங்கள் விஜய்' என பதில் அளித்திருக்கிறது படக்குழு.
கள்ளக்குறிச்சி சம்பவத்தினால் தன் பிறந்தநாளை கொண்டாட வேண்டாம் என ரசிகர்களுக்கும், கட்சி நிர்வாகிகளுக்கு நடிகர் விஜய் உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில் GOAT திரைப்படத்தின் இரண்டாவது பாடல் நாளை வெளியாவது குறிப்பிடத்தக்கது!