பிக்பாஸ் 8 ப்ரோமோ ஷூட்டில் விஜய்சேதுபதி... பாண்டிச்சேரி விசிட்டின் பின்னணி?
‘மகாராஜா’ படத்தின் வெற்றிக்குப் பிறகு நடிகர் விஜய்சேதுபதி ’பசங்க’ படப்புகழ் பாண்டிராஜ் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்க இருக்கிறார். இதில் நடிகை நித்யாமேனன் கதாநாயகியாக நடிக்கிறார். இந்தப் படம் தவிர்த்து வெற்றிமாறன் இயக்கத்தில் ‘விடுதலை-2’ படமும் வெளியாக உள்ளது. இந்த நிலையில், படப்பிடிப்பு ஒன்றில் கலந்து கொள்வதற்காக விஜய்சேதுபதி பாண்டிச்சேரி சென்றிருக்கிறார். பவுன்சர்களோடு அவர் கோட்-சூட் அணிந்து கொண்டு நடந்து வரும் காட்சிகளைப் பார்த்த ரசிகர்கள் இது பிக் பாஸ் சீசன்8-க்கான புரோமோ ஷூட்டா எனக் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
ஏனெனில், பிக் பாஸ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசனை தொகுத்து வழங்குவதில் இருந்து கமல்ஹாசன் விலகி விட்டதால் அவருக்குப் பதிலாக நிகழ்ச்சியை தொகுத்து வழங்க விஜய் தொலைக்காட்சி தரப்பு விஜய்சேதுபதியையும் அணுகியிருக்கிறார். அவர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது கிட்டத்தட்ட உறுதியாகி இருக்கிறது. விரைவில் அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கலாம். இந்த நிலையில், பாண்டிச்சேரியின் துணை நிலை ஆளுநர் கைலாசநாதனை மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்துப் பேசியிருக்கிறார் விஜய்சேதுபதி. அவருடன் அன்பான உரையாடல் நடந்ததாக கைலாசநாதனும் புகைப்படங்களைப் பகிர்ந்திருக்கிறார்.