'பசங்க' பாண்டிராஜ் இயக்கத்தில் இணையும் விஜய் சேதுபதி - நித்யாமேனன்... கதை என்ன?!
இயக்குநர் நித்திலன் சுவாமிநாதனுடன் ’மகாராஜா’ மற்றும் மிஷ்கின் இயக்கத்தில் ‘ட்ரெயின்’ ஆகிய படங்களை முடித்துவிட்டு நடிகர் விஜய் சேதுபதி நடித்துக் கொண்டிருக்கும் அடுத்தப் படம் குறித்தான அறிவிப்பு வெளியாகியுள்ளது. விஜய் சேதுபதியுடன் நடிகை நித்யா மேனன் ஜோடி சேர்ந்துள்ளார். இவர்கள் இருவரும் ஏற்கெனவே மலையாளத்தில் '19(1)A' எனும் படத்தில் ஜோடி சேர்ந்து நடித்துள்ளனர். இத்திரைப்படத்தை இயக்குநர் பாண்டிராஜ் இயக்க, சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிக்கின்றனர்.
கதைக்கு முக்கியத்துவம் கொண்ட, ஆறு முதல் அறுபது வரை அனைத்து தரப்பினரும் கண்டு களிக்கும் வகையில் இந்தப் படம் உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது. பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகி வரும் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு ஏற்கெனவே தொடங்கி பல்வேறு இடங்களில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பில் நித்யா மேனன் விரைவில் பங்கேற்கிறார். இந்த திரைப்படத்தின் பெயர், இதர நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப குழுவினர் குறித்த விவரங்களை தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக விரைவில் வெளியிடும்.
இப்படத்தில் பரோட்டா மாஸ்டராக விஜய் சேதுபதி நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு ஹோட்டலில் பரோட்டா மாஸ்டராக வேலை செய்யும் விஜய் சேதுபதி, நித்யா மேனனுடன் காதல் கொள்கிறார். இவர்கள் இருவரும் சேர்ந்து சந்திக்கும் ஒரு வித்தியாசமான பிரச்சனையும், அதற்குப் பின்னால் நடக்கும் சம்பவங்களும்தான் கதை.