நடிகர் விஜய்யின் விக்கிரவாண்டி மாநாடு... கேள்வி எழுப்பிய காவல்துறை!
நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி மாதத்தில் தமிழக வெற்றிக் கழகம் எனத் தனது கட்சியை அறிவித்தார். பின்பு கட்சி உறுப்பினர்கள் சேர்ப்பதில் தீவிர ஆர்வம் காட்டியவர் வருகிற 2026 சட்டமன்ற தேர்தலை இலக்காகக் கொண்டு செயல்படுகிறார். கடந்த 22-ம் தேதி தனது கட்சி கொடியை அறிமுகம் செய்தார். கொடியில் இடம்பெற்றிருக்கும் வாகை மலர், யானைகள் குறித்தான சுவாரஸ்ய வரலாற்றை தனது முதல் மாநாட்டில் தெரிவிப்பதாகவும் சொன்னார்.
முதல் மாநாட்டிற்காக திருச்சி, சேலம் உள்ளிட்ட இடங்களில் தவெக கட்சி சார்பில் இடம் பார்க்கப்பட்டது. ஆனால், கடந்த சில நாட்களுக்கு முன்பு விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் இந்த மாதம் 23ஆம் தேதி மாநாடு நடத்த அனுமதி கொடுக்குமாறு அந்த மாவட்ட நிர்வாகத்திடம் தவெக அனுமதி கேட்டிருந்தது. இப்போது தவெக-வுக்கு விழுப்புரம் மாவட்ட காவல்துறை நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது. ’மாநாடு நடக்கும் நேரம், எத்தனை பேர் பங்கேற்பார்கள், முக்கிய பிரமுகர்கள், தொண்டர்கள் வரும் பாதைக்கான ஏற்பாடு, மாநாட்டிற்கு எத்தனை வாகனங்கள் வருவதற்கான வாய்ப்பு உள்ளது, மாநாட்டில் பங்கேற்க வரும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான சிறப்பு ஏற்பாடு என்ன, உணவு ஏற்பாடு, மாநாடு முடிந்த பின்னர் குப்பைகளை சுத்தம் செய்வது எப்படி?’ உள்ளிட்ட 21 கேள்விகளை அந்த நோட்டீஸில் டிஎஸ்பி பார்த்திபன் கேட்டுள்ளார்.
இந்த விஷயங்களுக்கெல்லாம் ஐந்து நாட்களுக்குள் காவல்துறைக்கு தவெக பதிலளிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.