லைகாவின் சாம்ராஜ்யத்தையே முடித்துவிட்டாரா ஷங்கர்… ‘இந்தியன் - 3' படத்துக்கானப் பின்னணி என்ன?!
இங்கிலாந்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ‘லைகா’ மொபைல் நிறுவனத்தின் உரிமையாளர் சுபாஸ்கரன் இலங்கைத் தமிழர். தமிழ் சினிமாவின் மீது உள்ள ஆர்வத்தால் ஆரம்பத்தில் தமிழ் படங்களின் வெளிநாட்டு உரிமையை வாங்கி விற்றுக்கொண்டிருந்தவர், ‘கத்தி' படம் மூலம் தமிழ் சினிமாவில் நேரடியாக தயாரிப்பாளராக களம் இறங்கினார்.
ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித் என தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோ, ஷங்கர், மணிரத்னம் உள்ளிட்ட முன்னணி இயக்குநர்களின் படங்களைத் தயாரிக்க வேண்டும் என்பதே லைகாவின் விருப்பமாக இருந்தது. அதனால்தான் ஷங்கர் - ரஜினிகாந்த் கூட்டணியின் 2.0, மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் எனப் பெரிய பட்ஜெட் படங்களைத் தயாரித்தது லைகா. கமல்ஹாசனுடனும் முதலில் ‘சபாஷ் நாயுடு’ என்கிற படத்தில்தான் லைகா இணைந்தது. ஆனால், இந்தப் படத்தின் படப்பிடிப்பு சில நாட்கள் நடந்தநிலையில் கமல்ஹாசன் வீட்டின் மாடியில் இருந்து கீழே விழுந்து காலை உடைத்துக்கொள்ள படப்பிடிப்பு அப்படியே நின்றுபோனது.
கமல்ஹாசன் உடல்நலம் தேறவே கிட்டத்தட்ட ஓர் ஆண்டுக்கும் மேலான நிலையில், ‘பிக்பாஸ்' நிகழ்ச்சி கமல்ஹாசனுக்கு மிகப்பெரிய புகழைக் கொடுக்க, எல்லா வீடுகள் தோறும் கமல்ஹாசனைப் பற்றிய பேச்சுப்பரவ, அப்போதுதான் ‘இந்தியன்-2' படத்தை தொடங்குவது என முடிவு செய்யப்பட்டது.
பிக்பாஸ் இறுதிநாள் நிகழ்வின் மேடையிலேயே ஷங்கர் மற்றும் தயாரிப்பாளர் தில் ராஜு முன்னிலையில் இந்தியன் - 2 படம் ஆரம்பிக்கப்போவதாகச் சொன்னார் கமல்ஹாசன். ஆனால், லைகா நிறுவனம் ஏற்கெனவே ‘சபாஷ் நாயுடு’ படத்துக்கு முதலீடு செய்திருந்ததால், இழப்பீடு கேட்க, ‘இந்தியன்- 2’ படத்தை லைகாவும், ஷங்கர் அடுத்து இயக்கும் படத்தை தில் ராஜுவும் தயாரிப்பது என முடிவுசெய்யப்பட்டது. ராம் சரண் நடிக்கும் ‘கேம் சேஞ்சர்' படத்தை தில் ராஜு தயாரிக்க, ‘இந்தியன்-2’ படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கத் தொடங்கியது.
ஆனால், ‘இந்தியன் 2’ படத்தை தொடங்கியதில் இருந்தே பல பிரச்சனைகள். ஈவிபி ஸ்டியோவில் ஏற்பட்ட விபத்தில் மூவர் பலி, கொரானா தடை, அதன்பிறகு நடிகர் விவேக் உள்பட படத்தில் நடித்த முக்கிய நடிகர்கள் மரணம், கமல்ஹாசனின் அரசியல் பயணம் என ‘இந்தியன் -2’ படம் பட்ஜெட்டைத்தாண்டி எங்கேயோ போய்விட்டது.
லைகா நிறுவனம் தன்னுடைய நஷ்டத்தைக் குறைக்க ஷங்கர் மற்றும் கமல்ஹாசனிடம் இரண்டு பாகங்களாக படத்தை வெளியிடமுடியுமா எனக் கேட்க, படத்தின் முக்கியமானக் கதையை மூன்றாம் பாகத்துக்கு நகர்த்திவிட்டு இரண்டாம் பாகத்தை கதையே இல்லாமல் வெறுமனே நகர்த்தியதுதான் அவ்வளவு பிரச்சனைக்கும் காரணம் என்கிறார்கள்.
இப்போது ‘இந்தியன் -2’ பெருத்த நஷ்டத்தை சந்திக்கும் நிலையில் தற்போது கடைசிக்கட்ட படப்பிடிப்பில் இருக்கும் ரஜினியின் ‘வேட்டையன்’, அஜித்தின் ‘விடாமுயற்சி' படங்களின் நிலை என்னவாகும் என்பது பெரிய கேள்வியாக மாறியிருக்கிறது.