தனுஷின் மகனும் பொயட்டுதான்... 'நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்' படத்தில் அறிமுகமாகும் யாத்ரா தனுஷ்!
நடிகர் தனுஷ் இயக்குநராக அவதாரம் எடுத்திருக்கும் மூன்றாவது படம் ‘நிலவுக்கு என்மேல் என்னை கோபம்?’. இதற்கு முன்பு அவர் இயக்கிய ‘ப. பாண்டி’, ‘ராயன்’ படங்கள் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில், 2கே கிட்ஸின் காதல் கதையாக உருவாகி இருக்கிறது ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ திரைப்படம். இதில் நடிகர்கள் பவிஷ், அனிகா சுரேந்திரன், பிரியா வாரியர் உள்ளிட்டப் பலர் நடித்திருக்கின்றனர். தனது சகோதரி மகன் பவிஷை கதாநாயகனாக அறிமுகப்படுத்துகிறார் தனுஷ்.
படத்துக்கு ஜிவி பிரகாஷ்குமார் இசையமைத்திருக்கிறார். இந்தப் படத்தின் மூலம் நீண்ட நாட்கள் கழித்து தயாரிப்பிலும் களம் இறங்கி இருக்கிறார் தனுஷ். இந்தப் படத்தின் முதல் பாடலான ‘கோல்டன் ஸ்பேரோ’ வருகிற ஆகஸ்ட் 30-ம் தேதி வெளியாகிறது. இதில் நடிகை பிரியங்கா மோகன் நடனம் ஆடி இருக்கிறார்.
''மடிசார் மாமியாக பிரியங்கா கியூட்டாக நடனம் ஆடி இருக்கிறார்'' என பாடலை முன்பே பார்த்த எஸ்.ஜே. சூர்யா தனது பாராட்டுகளைத் தெரிவித்திருக்கிறார். இந்த 'கோல்டன் ஸ்பேரோ' பாடலை தனுஷின் மகன் யாத்ரா தனுஷ் எழுதி இருக்கிறார் என்ற ஆச்சரியத் தகவலையும் எஸ்.ஜே. சூர்யா தன்னுடைய பதிவில் பகிர்ந்திருக்கிறார்.
‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்?’ படத்தை முடித்துவிட்டு மீண்டும் ஒரு படத்தை இயக்கி, நடிக்க இருக்கிறார் தனுஷ். இதில் நித்யாமேனன் கதாநாயகி என்பது குறிப்பிடத்தக்கது.