ஒரு குழந்தையின் உடல் வளர்ச்சி சீராக இருக்க எலும்பு உறுதியாக இருக்க வேண்டியது அவசியம். எலும்பு உறுதியாக இருக்கக் குழந்தைகளுக்குப் பால் குடிக்கக் கொடுப்பது, மருத்துவர் பரிந்துரை அடிப்படையில் கால்சியம் சத்து மாத்திரை எடுத்துக்கொள்வது போன்றவற்றைப் பெற்றோர்கள் செய்கின்றனர். குழந்தைகளின் எலும்பு உறுதியாக இருக்க இது மட்டும் போதுமானது இல்லை. இதற்குக் கூடுதலாக செய்ய வேண்டிய ஐந்து விஷயங்கள் பற்றி இங்கு பார்ப்போம்!
எலும்புகள் உறுதியாக இருக்க கால்சியம் தேவை. அந்த கால்சியத்தை எலும்புகள் கிரகித்துக்கொள்ள வைட்டமின் டி மிகவும் அவசியம். வைட்டமின் டி இன்றி கால்சியத்தை கிரகித்துக்கொள்ள முடியாது. சூரிய ஒளி நம்முடைய சருமத்தில் படும்போது நம்முடைய உடலே வைட்டமின் டி-யை உற்பத்தி செய்துகொள்ளும். இதற்கு குழந்தைகளை வெளியே வெயிலில் விளையாட அனுமதிக்க வேண்டும். காலை மற்றும் மாலை நேரத்தில் புற ஊதாக் கதிர்வீச்சு தாக்கம் குறைவாக இருக்கும் நேரத்தில் குழந்தைகளை சூரிய ஒளி படும் வகையில் விளையாட விட வேண்டும்.
நம்முடைய பாரம்பரிய உணவுகளான கேழ்வரகு உள்ளிட்ட சிறுதானியங்களில் கால்சியம் அதிகம் உள்ளது. வெறும் அரசி, கோதுமை மற்றும் வௌிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஓட்ஸ்ஸை சாப்பிடுவதற்கு பதில் சிறுதானிய உணவுகளை குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும். முருங்கைக் கீரையிலும் அதிக அளவில் கால்சியம் உள்ளது. இது போன்ற நம்முடைய பாரம்பரிய உணவுகளை சாப்பிடும் போது கால்சியம் மட்டுமல்ல, உடலுக்குத் தேவையான அத்தனை ஊட்டச்சத்துக்களும் கிடைத்துவிடும்.
நம்முடைய பாரம்பரிய உணவில் எள் உருண்டை மிகவும் முக்கியமானது. எள்ளில் அதிக அளவில் கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் உள்ளன. இவை எலும்பு செல்கள் உருவாக்கத்துக்கும் ஆரோக்கியத்துக்கும் மிகவும் அவசியம். தினமும் ஒரு ஸ்பூன் அளவுக்கு எள் சாப்பிட்டு வந்தால் நல்ல கொழுப்புடன் கால்சியம், பாஸ்பரஸ் சத்துக்கள் கிடைத்துவிடும்.
உடற்பயிற்சி, விளையாட்டில் ஈடுபடும் போது எலும்புகள் உறுதியாகின்றன. குழந்தைகளுக்குக் கடினமான எடை தூக்கும் பயிற்சிகளை செய்ய அனுமதிக்க வேண்டாம். சாதாரணமான ஓட்டம், குதித்தல் போன்ற பயிற்சிகளை செய்ய வையுங்கள். இது ஈர்ப்பு விசைக்கு எதிராக எலும்புகளை உறுதியாக செயல்பட வைக்கும். இதனுடன் யோகா போன்ற பயிற்சிகளையும் செய்யலாம்.
எலும்பு வளர்ச்சிக்கு கால்சியம், வைட்டமின் டி மட்டும் போதும் என்ற எண்ணம் உள்ளது. ஆனால் எலும்பின் உறுதித் தன்மைக்கு கால்சியம் மட்டும் போதுமானது அல்ல. மக்னீஷியம், துத்தநாகம், பாஸ்பரஸ் என பல தாது உப்புக்களும் துணை செய்கின்றன. வைட்டமின் டி-யை உருவாக்கும் பணிக்கு மக்னீஷியம் மிகவும் முக்கியம். அதே போன்று எலும்பு செல்கள் உருவாக்கத்திற்கும், எலும்பு செல்கள் அதிகப்படியாகச் சிதைவுறுவதைத் தடுக்கவும் துத்தநாகம் தேவை. இந்த தாது உப்புக்கள் உள்ள உணவுகளை குழந்தைகளுக்குக் கொடுப்பது மிகவும் அவசியம்.