முட்டையின் மஞ்சள் கருவைத் தூக்கி எறிபவரா நீங்கள்?

முட்டையின் மஞ்சள் கருவைத் தூக்கி எறிபவரா நீங்கள்?

முட்டையின் மஞ்சள் கருவில் தான் வைட்டமின் ஏ, டி, செலீனியம் என ஏராளமான ஊட்டச்சத்துக்கள் உள்ளன!
Published on

தினமும் ஒரு முட்டையை எடுத்துக்கொண்டால் உடலுக்குத் தேவையான பெரும்பாலான சத்துக்கள் கிடைத்துவிடும் என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகின்றனர். ஆனால், பலருக்கு முட்டையின் மஞ்சள் கருவை பிடிப்பது இல்லை. சாப்பிடும் போது முட்டையின் மஞ்சள் கருவை தூக்கி எறிவது, மஞ்சள் கருவை மட்டும் நீக்கிவிட்டு, வெள்ளைப் பகுதியை வைத்து சமைப்பது என்று பலரும் செய்கின்றனர். சிலர் கொழுப்பு அதிகரித்துவிடும் என்று கூறி மஞ்சள் கருவை தூக்கி எறிகின்றனர்.

உண்மையில் முட்டையின் மஞ்சள் கரு உடல் நலத்துக்குப் பாதிப்பா? முட்டையின் மஞ்சள் கருவை தவிர்ப்பது சரிதானா என்று பார்ப்போம்.

முட்டையின் மஞ்சள் கருவில் தான் ஏராளமான வைட்டமின்கள், தாது உப்புக்கள் என ஏராளமான ஊட்டச்சத்துக்கள் உள்ளன. குறிப்பாக கொழுப்பில் கரையும் வைட்டமின் ஏ உள்ளிட்ட முக்கிய சத்துக்கள் மஞ்சள் கருவில் உள்ளது. இது பார்வைத் திறன் மேம்பட, நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க, சருமம் பொலிவுடன் இருக்க என பல விதங்களில் உதவி செய்கிறது.

சிறிய அளவில் வைட்டமின் டி-யும் முட்டையின் மஞ்சள் கருவில் உள்ளது. இது எலும்பு உறுதியாக இருக்க, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க என்று பல வகைகளில் உதவி செய்கிறது.

மூளை செல்களின் ஆரோக்கியத்துக்கும், கல்லீரல் செயல்திறன் சரியாக இருக்கவும் கோலைன் என்ற ஊட்டச்சத்து உதவுகிறது. அந்த கோலைன் முட்டையின் மஞ்சள் கருவில் உள்ளது. நம்முடைய அறிவாற்றல், நினைவாற்றல் நல்லபடியாக இருக்க கோலைன் உதவி செய்கிறது. தாயின் வயிற்றில் சிசு வளரும் போது மூளை செல்கள் உருவாக்கத்தில் கோலைன் உதவி செய்கிறது. எனவே தான் கர்ப்பிணிகள் முட்டையை எடுத்துக்கொள்ளப் பரிந்துரைக்கப்படுகின்றனர்.

முட்டையில் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் உள்ளது. அது இதயத்தின் செயல்பாடு ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது. உள் உறுப்புகளில் ஏற்படக்கூடிய அழற்சி - வீக்கங்களைத் தடுக்க உதவுகிறது.

முட்டை, மஞ்சள் கரு, egg yolk
முட்டையின் மஞ்சள் கரு

பலரும் முட்டையில் உள்ள கொழுப்பு நம்முடைய உடலுக்கு கெடுதலை உண்டாக்கும் என்று கருதுகின்றனர். இது உண்மையில்லை என்பதை சமீபத்திய ஆய்வுகள் உறுதி செய்துள்ளன. நம்முடைய ரத்தத்தில் கொழுப்பு அளவு அதிகரிக்க முட்டையின் மஞ்சள் கரு மிகச் சிறிய அளவில் தான் காரணமாக இருக்கின்றன. எனவே முட்டையின் மஞ்சள் கருவை தவிர்க்க வேண்டிய அவசியமில்லை என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். மேலும் நல்ல கொழுப்பு முட்டையில் உள்ளது. அது ரத்தத்தில் நல்ல கொழுப்பு அளவை அதிகரிக்க உதவுகிறது.

தினசரி ஒன்று என்ற அளவில் முட்டையை எடுத்துக்கொள்ளலாம். அளவுக்கு அதிகமாக எடுக்கும் போது கொலஸ்டிரால் அளவு அதிகரிக்கலாம். சமைக்காத, பச்சை முட்டையை எடுத்துக்கொள்வது பாக்டீரியா தொற்று உள்ளிட்ட பாதிப்பை ஏற்படுத்தலாம்.

முட்டையின் மஞ்சள் கருவில் அதிக கொழுப்பு, கலோரி உள்ளது. எனவே, அதிக அளவில் எடுப்பது உடல் எடையை அதிகரிக்கச் செய்யும். எனவே, எதையும் அளவோடு எடுத்துக்கொள்வது நல்லது.

Related Stories

No stories found.
logo
News Tremor
newstremor.com