Smoking
Smoking

சிகரெட் புகை எப்படி நுரையீரல் புற்றுநோய்க்கு காரணமாகிறது தெரியுமா?

சிகரெட் புகைத்தல் நுரையீரல் புற்றுநோய் உள்ளிட்ட 15 வகையான புற்றுநோய் ஏற்படக் காரணமாக இருக்கிறது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்!
Published on

புற்றுநோய் என்றாலே மிகவும் கொடுமையான நோய். அதிலும் நுரையீரல் புற்றுநோய் மிகவும் மோசமானதாக உள்ளது. இந்த புற்றுநோய்க்கு மிக முக்கியமான காரணமாக இருப்பது சிகரெட், பீடி பழக்கம்தான். புகைக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு அதிக அளவில் நுரையீரல் புற்றுநோய் பாதிப்பு ஏற்படுகிறது என்பதை உலக அளவில் பொதுவாகக் காணக் கூடியதாக உள்ளது.

இந்தியாவில் நுரையீரல் புற்றுநோயாளிகளுக்குப் புற்றுநோய் ஏற்பட முக்கிய காரணமாக இருப்பது சிகரெட், பீடி உள்ளிட்ட புகையிலை பொருட்களை பயன்படுத்துவதுதான். சிகரெட்டில் 7000க்கும் அதிகமான ரசாயனங்கள் உள்ளன. இதில் 70க்கும் மேற்பட்டவை புற்றுநோயை உண்டாக்கும் என்று அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளன. இவை முதலில் நுரையீரல் சுவரைப் பாதித்து அதில் உள்ள செல்களில் படிகிறது. இது கொஞ்சம் கொஞ்சமாக நுரையீரலைப் பாதித்து புற்றுநோயை ஏற்படுத்துகிறது.

Smoking
Smoking

சிகரெட் புகைக்கும் போது அதிலிருந்து வரும் நச்சுக்கள் செல்களின் டிஎன்ஏ-வில் சேதத்தை ஏற்படுத்துகிறது. இந்த டிஎன்ஏ தான் நம்முடைய செல்கள் எப்படி வளர்ச்சி அடைய வேண்டும் என்பதை கட்டுப்படுத்துகிறது. இந்த அடிப்படை விஷயத்திலேயே பாதிப்பு வந்துவிட்டால் அது புற்றுநோய்க்கு வழிவகுக்கும்.

இப்படி டிஎன்ஏ-வில் ஏற்பட்ட பாதிப்பைச் சரி செய்வது நம்முடைய உடலுக்கு மிகவும் கடினமான காரியமாக இருக்கிறது. இதனால் நாளடைவில் நம் உடலுக்கு மிகப்பெரிய சேதம் ஏற்படுகிறது. சிகரெட் புகைப்பதால் உண்டாகும் நச்சு நுரையீரலை மட்டும் பாதிப்பதில்லை. ஒட்டுமொத்த உடலையும் பாதிக்கக் கூடியதாக உள்ளது.

புகையிலையில் உள்ள ரசாயனம் சுவாசப்பாதையில் உள்ள சிலியா என்ற பகுதியை சேதப்படுத்துகிறது. இது காற்றுப்பாதையில் அழுக்கு, தூசு மற்றும் நோய்த் தொற்று கிருமி இல்லாமல் தூய்மையாக வைத்திருக்க உதவுகிறது. சிகரெட் புகை இந்த பணியைப் பாதித்து கிருமிகள் நுழைய துணை செய்கிறது.

புகையிலை நச்சுக்கள் செல்களில் அழற்சி மற்றும் அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. இதனால் செல்களில் வீக்கம் உள்ளிட்டவை ஏற்படுகிறது. இதை சரி செய்ய உடல் முயற்சி செய்கிறது... அந்த நேரத்தில் செல்கள் நகலெடுப்பு பணிகளில் பிழைகள் ஏற்படுகின்றன.

புகைபிடிப்பதால் நுரையீரல் செல்களில் நடைபெறும் ஆக்சிஜனேற்ற நிகழ்வுகள் மோசமடைகிறது. இதனால் டிஎன்ஏ, புரதங்கள், லிப்பிடுகள் உள்ளிட்டவற்றின் செல் அளவிலான கட்டமைப்புகளில் சேதம் ஏற்படுகிறது.

சிகரெட் புகைக்கும் போது தார் என்ற பொருள் உண்டாகிறது. இது நுரையீரலில் படிந்து புற்றுநோயை உண்டாக்குகிறது. நுரையீரல் புற்றுநோய் மட்டுமின்றி எம்பிஸிமா மற்றும் சிஓபடி எனப்படும் நாட்பட்ட மூச்சுக்குழாய் அடைப்பு நோய் உள்ளிட்ட பாதிப்புகளையும் ஏற்படுத்தலாம் அல்லது அதிகரிக்கச் செய்யலாம்.

சிகரெட்டில் உள்ள நிகோடின் மீண்டும் மீண்டும் புகைக்க வேண்டும் என்ற ஆசையைத் தூண்டும் போதைப் பொருளாகும். இது புற்றுநோயை உண்டாக்காது என்றாலும் புத்தகத்தைப்பிடிப்பதை நிறுத்த முடியாத மனநிலையை உண்டாக்குகிறது.

நீங்கள் புகைபிடிப்பவராக இருந்தால் உங்கள் ஆரோக்கியத்தை காக்க முற்றிலுமாக புகையிலைப் பொருட்கள் பயன்பாட்டை இன்றே, 0இப்போதே நிறுத்துவதுதான் சிறந்த விஷயமாக இருக்கும்!

Related Stories

No stories found.
logo
News Tremor
newstremor.com