மன அழுத்தம், பதட்டம், உளவுச் சிக்கல்கள் அதிகம் இருந்தால்தான் கவனமின்மை வரும். கவனமின்மையைப் போக்க, மனநலனை வலுவாக்க இதெல்லாம் செஞ்சு பாருங்க மக்களே!
ஒவ்வொரு நாளும் சில நிமிடங்கள் உங்கள் மூச்சில் கவனம் செலுத்துங்கள். அமைதியாக அமர்ந்து, கண்களை மூடி, ஆழமான மூச்சை எடுக்கவும். ஒவ்வொரு சுவாசத்தின் மீதும், வெளிவாசத்தின் மீதும் கவனம் செலுத்துங்கள். இந்த எளிய பயிற்சி உங்கள் சிந்தனைகளை மையமாக்கி, மன அழுத்தத்தை குறைக்க உதவும்.
உணவை அவசர அவசரமாக சாப்பிடாமல், ஒவ்வொரு முறையும் முழுமையாக சுவைத்து, அரைத்து, மென்று சாப்பிடுங்கள். இது உங்கள் செரிமானத்தை மேம்படுத்துவதோடு, மன உணர்ச்சியை மிக அதிகமாகத் தரும்.
நடைப்பயிற்சி, யோகா போன்ற செயல்பாடுகளில் ஈடுபடுங்கள். இந்த பயிற்சிகள் உங்கள் உடல் மற்றும் மனத்துடன் தொடர்பை ஏற்படுத்தி, அமைதியையும் நலத்தையும் மேம்படுத்தும்.
ஒவ்வொரு நாளும் குறைந்தபட்சம் ஐந்து நிமிடங்கள் தியானத்திற்கு ஒதுக்குங்கள். நீங்கள் யாரைப் பின்பற்றுகிறீர்களோ அந்த உருவத்தை நினைத்து உங்கள் மனதை ஒருமுகப்படுத்துங்கள். மனக் கண்ணில் உள்ள அந்த உருவத்துடன் உரையாற்றுங்கள். என்ன இப்படியெல்லாம் யோசிக்கிறோம் என உங்கள் சிந்தனைகளை மதிப்பீடு செய்யாமல் அவற்றை இயல்பாக வந்துபோக விடுங்கள். இந்த பயிற்சி மன அழுத்தம் மற்றும் பதட்டத்தை குறைக்க உதவும்.
உங்கள் விருப்பமான செயல்களில் ஈடுபட நேரம் ஒதுக்குங்கள். இது புத்தகம் வாசிப்பது, குளியல் அல்லது விளையாட்டு என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். மல்ட்டி டாஸ்க்கிங் அதாவது பல வேலைகளை ஒரே நேரத்தில் செய்யாதீர்கள். பணிகளை ஒழுங்குபடுத்துங்கள். சுய பராமரிப்பு செயல்பாடுகளில் தொடர்ந்து ஈடுபடும் பழக்கம் மன அழுத்தத்தை குறைத்து, மனநிலையை மேம்படுத்தும்.
நல்ல தூக்கம் மன மற்றும் உடல் நலத்திற்கு இன்றியமையாதது. ஒவ்வொரு இரவும் 7-9 மணி நேரங்கள் தரமான தூக்கத்தைப் பெறுங்கள். நிம்மதியான தூக்கம் வர, படுக்கைக்கு செல்லும் அரை மணி நேரத்துக்கு முன் செல்போன் அல்லது டிவி பார்ப்பதை தவிர்க்கவும். அமைதியான தூக்க சூழலை உருவாக்கவும்.
காய்கறிகள், பழங்கள், கீரைகள், புரதங்களை உங்களின் உணவுகளில் அதிகமாக சேர்த்துக்கொள்ளுங்கள். அதிகப்படியான கெஃபைன்(காபி) மற்றும் சர்க்கரை சேர்க்கப்பட்ட உணவுகளைத் தவிர்க்கவும். இது மனநிலையில் மாற்றங்களை ஏற்படுத்தக்கூடும்.
நண்பர்களுக்கும் குடும்பத்தினருக்கும் அதிக நேரம் ஒதுக்குங்கள். உங்களுக்கு எதோ ஒரு உதவி தேவைப்படுகிறது எனும்போது நெருங்கிய உறவுகளிடம் அதுபற்றி கேட்கத் தயங்காதீர்கள்.
வேலை நாளின் போது பிரேக் எடுத்தல் சோர்வைத் தடுக்கும் மற்றும் கவனத்தை மேம்படுத்தும். உங்கள் டெஸ்க்கை விட்டு விலகி, சிறிய நடைப்பயிற்சியில் ஈடுபடுங்கள், அல்லது ஆழமான மூச்சுப்பயிற்சிகளைச் செய்து மீண்டும் உங்களை நீங்களே தயார் படுத்திக்கொள்ளுங்கள்.