நம்ம ஊர் கனிகளில் இவ்வளவு சத்துக்களா?
பழங்கள் ஊட்டச்சத்தின் சுரங்கமாக விளங்குகிறது. வைட்டமின்கள், தாதுஉப்புக்கள், ஆன்டி-ஆக்ஸிடன்ட் நிறைந்த பழங்களை தினமும் எடுத்துக்கொள்வதன் மூலம் நோயற்ற பெருவாழ்வு வாழ முடியும். தினமும் குறைந்தது 4-5 வித பழங்களை எடுத்துக்கொள்வது ஆரோக்கியமான வாழ்வை உறுதி செய்யும். நம் ஊரில் கிடைக்கும் பழங்களின் ஊட்டச்சத்து வளங்கள் மற்றும் அதன் தாக்கம் பற்றிப் பார்ப்போம்.
நாவல்:
நாவல் பழம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யும். ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்க உதவுகிறது. இதில் வைட்டமின் ஏ, சி நிறைவாக உள்ளது. இரும்புச் சத்தும் நிறைவாக உள்ளதால் ரத்தசோகை உள்ளிட்ட பாதிப்பு உள்ளவர்கள் இதை எடுத்துக்கொள்ள வேண்டும். இது தவிர இதயத்தின் ஆரோக்கியத்தை காக்க உதவுகிறது. ஒட்டுமொத்தத்தில் உடல் முழுக்க ஆரோக்கியமாக இருக்க சரும பொலிவுடன் இருக்க நாவல் பழம் துணை செய்கிறது.
நெல்லிக் கனி:
வைட்டமின் சி, ஆன்டிஆக்ஸிடண்ட் நிறைவாக உள்ளதால் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது. மேலும் சருமத்தை பொலிவுடன் இளமையாக வைக்க உதவுகிறது. கொலஸ்டிரால் பிரச்னை உள்ளவர்கள் இதை எடுத்துக்கொள்ளலாம். இது கெட்ட கொழுப்பு அளவைக் குறைக்க உதவுகிறது. ரத்த நாளங்களில் படியும் கொழுப்பை அகற்றுகிறது என்பதால் இதயத்துக்கும் நல்லது. உடல் எடை குறைக்க திட்டமிடுபவர்கள் நெல்லிக்காயை தினமும் எடுத்துக்கொள்ளலாம். இது செரிமானத்தை மேம்படுத்துகிறது. வயிறு உப்புசம், வாயு பிரச்னையை போக்குகிறது. ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது.
கொய்யா:
நம் ஊரில் எளிதில் கிடைக்கும் கொய்யாப் பழத்தைக் காட்டிலும் தாய்லாந்து கொய்யா மீது பலருக்கும் மோகம் வந்துவிட்டது. நார்ச்சத்து, வைட்டமின் சி, ஆன்டிஆக்சிடண்ட் என ஒரு மனிதனுக்குத் தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் கொய்யாவில் உள்ளது. ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவது, இதயத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவது, உடல் எடையைக் குறைக்க உதவுவது, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்வது என இதனால் கிடைக்கக் கூடிய பலன்கள் அதிகம்.
பப்பாளி:
பப்பாளியில் நார்ச்சத்து, வைட்டமின் ஏ, சி மற்றும் இ, பொட்டாசியம் உள்ளிட்டவை நிறைவாக உள்ளது. இதில் உள்ள பாப்பின் என்ற ரசாயனம் செரிமான குறைபாடுகளைப் போக்க உதவுகிறது. பப்பாளிப் பழத்தில் உள்ள சத்துக்கள் புற்றுநோய் செல்களுக்கு எதிராக போராடுகின்றன. லைகோபின் மற்றும் வைட்டமின் சி இதய நோய்க்கான வாய்ப்பைக் குறைக்கிறது. கெட்ட கொழுப்பைக் குறைத்து நல்ல கொழுப்பு அளவை அதிகரிக்கச் செய்கிறது. சரும பாதிப்புகளை சரி செய்து, சருமம் பொலிவாக ஆரோக்கியமாக இருக்கச் செய்கிறது. உடல் எடையைக் குறைக்க திட்டமிடுபவர்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய சரியான பழங்களில் பப்பாளியும் ஒன்று!
மாம்பழம்:
சீசன் பழமான மாம்பழத்தில் வைட்டமின் ஏ அதிக அளவில் உள்ளது. இது தவிர வைட்டமின் சி, ஆன்டி ஆக்சிடண்ட், நார்ச்சத்து போன்றவை நிறைவாக உள்ளது. இது செரிமான மண்டலத்தின் செயல்பாட்டை மேம்படுத்துகிறது. நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கச் செய்கிறது. கெட்ட கொழுப்பு அளவைக் குறைத்து இதய நோய் வருவதற்கான வாய்ப்பைக் குறைக்கிறது. வைட்டமின் ஏ நிறைவாக உள்ளதால் கண்களின் செயல்பாடு மேம்படுகிறது.