நீண்டநாள் வாழ வேண்டும் என்று எல்லோரும் நினைப்போம்... அதற்கு ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்ற வேண்டும் என்ற பொதுவான எண்ணம் இருக்கும். ஆனால் எதை செய்தால் வாழ்நாளை நீட்டிக்கலாம் என்ற ரகசியம் பலருக்கும் சரியாகத் தெரிவதில்லை. சில ஆச்சரியமான பழக்கவழக்கங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் நல்வாழ்வையும் மேம்படுத்துவதன் மூலம் நீண்ட ஆயுளைக் கணிசமாக அதிகரிக்க உதவும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
இளம் வயதில் அல்லது குறைந்தபட்சம் நடுத்தர வயதில் ஒருவர் ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்றத் தொடங்குவதன் மூலம் வாழ்நாளை நீட்டிக்கலாம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். 40 வயதில் ஒருவர் ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு மாறுகிறார் என்றால் அவர் தன்னுடைய வாழ்நாளைக் குறைந்தபட்சம் 24 ஆண்டுகள் வரை அதிகரிக்கலாம்.
துடிப்பான வாழ்க்கை முறை, புகைப் பழக்கம் இன்மை, மன அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருப்பது, ஆரோக்கியமான சமச்சீரான உணவு, மதுப் பழக்கம் இன்மை அல்லது மிகக் குறைந்த அளவில் எடுத்துக்கொள்வது, போதுமான தூக்கம், சமூக உறவை மேம்படுத்துவது, போதை பழக்கம் இன்மை, உடல் எடையைக் கட்டுக்குள் வைப்பது என்று பல விஷயங்கள் இதில் உள்ளன. இவற்றில் முக்கியமான 4 வாழ்நாளைக் கூட்டும் விஷயங்களை பார்ப்போம்.
ஆரோக்கியமான உணவு உடலுக்கு ஆற்றலையும் மனதுக்குப் புத்துணர்வையும் அளிக்கும். அதிக அளவில் சமைத்த உணவை எடுத்துக்கொள்வதற்குப் பதில், பச்சைக் காய்கறி, பழங்களைச் சேர்த்துக்கொள்ள வேண்டும். முழு தானியம், ஆரோக்கியமான கொழுப்பு உள்ளிட்டவற்றைக் கொண்ட சமச்சீரான உணவை உட்கொள்வது உடலில் தேவையற்ற கொழுப்பு சேர்வதைத் தடுத்து உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், இதய நோய் போன்ற நாட்பட்ட நோய் ஏற்படுவதைத் தடுக்கும் அல்லது தாமதப்படுத்தும்.
பெரியவர்களுக்கு ஒரு நாளைக்கு 7 முதல் 9 மணி நேர தூக்கம் அவசியம். தூக்கம் என்பது ஓய்வெடுக்கும் நேரம் என்று மட்டும் பொதுவாக பலரும் கருதுகின்றனர். உண்மையில் நாம் தூங்கும் போது நம்முடைய மூளை அதிகம் வேலை செய்கிறது. நாம் புதிய விஷயங்களைக் கற்க, நினைவுகூர மற்றும் புதிய விஷயங்களை உருவாக்கும் ஆற்றலைப் பெற உதவுகிறது. உடலில் உள்ள நச்சுக்களை அகற்றும் பணியை நம்முடைய உடல் தூங்கும் போதுதான் செய்கிறது. இது போன்று ஏராளமான பணிகள் தூக்கத்தின் போதுதான் நடக்கின்றன.
உடற்பயிற்சி செய்வது, உடலை எப்போதும் துடிப்பாக வைத்திருப்பதன் மூலம் வாழ்நாளை நீட்டிக்கலாம். தினமும் நடைப்பயிற்சி, உடற்பயிற்சி செய்வதன் மூலம் உடல் அதற்குப் பழகிவிடும். உடற்பயிற்சி, நடைப்பயிற்சி செய்யும் போது உடல் முழுவதும் உள்ள தசைகள், மூட்டுக்கள் இயக்கப்படும். மேலும் உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறும், தேவையற்ற கொழுப்பு கரையும். உடல் எடை கட்டுக்குள் இருக்கும். மன அழுத்தமும் நீங்கி, உடலும் மனமும் புத்துணர்வுடன் இருக்கும்.
சிகரெட், மது போன்ற போதைப் பழக்கங்களைத் தவிர்க்க வேண்டும். சிகரெட் பழக்கம் காரணமாக ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான மக்கள் புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டு உயிரிழக்கின்றனர். சிகரெட் மற்றும் மதுவில் உள்ள நச்சுப் பொருட்கள் உடலின் ஒவ்வொரு உறுப்பையும் பாதிக்கின்றது. இவை ஒரு மனிதரின் வாழ்நாளைப் பெரிய அளவில் குறைத்துவிடுகிறது. சிகரெட் புகைப்பதன் மூலம் நுரையீரலும் மதுப் பழக்கம் காரணமாக கல்லீரல், கணையம் உள்ளிட்ட உறுப்புக்களும் பெரிய அளவில் பாதிப்பைச் சந்திக்கின்றன. இவற்றைத் தவிர்ப்பதன் மூலம் வாழ்நாளை அதிகரிக்கலாம்.