தொப்பையைக் குறைக்க இதை எல்லாம் செய்யலாமா?
தொப்பையைக் குறைக்க முயற்சிப்பவர்கள் எடுத்த எடுப்பில் கடினமான பயிற்சி, வயிற்றுக்கு மட்டும் பயிற்சி, விரதம் என்று பல முயற்சிகளை செய்து சீக்கிரத்தில் சோர்வடைந்து தொப்பைக் குறைப்பு முயற்சியை கைவிட்டுவிடுவர். ஆனால் வொர்க்அவுட், டயட் என அனைத்தையும் ஒன்று சேர்ந்து முயற்சி செய்தால் தொப்பையைக் கொஞ்சம் கஷ்டப்பட்டுக் கரைத்துவிடலாம்.
தொப்பையைக் குறைக்க முயல்பவர்கள் கடுமையான டயட், உடற்பயிற்சி என்று தொடங்குவதற்கு முன், தொப்பையைப் பற்றி சற்று அறிந்துகொள்வது நல்லது. உணவு பழக்கம், துடிப்பற்ற வாழ்க்கை முறை, ஹார்மோன் சமநிலையில் மாற்றம் எனத் தொப்பை ஏற்படப் பல காரணங்கள் உள்ளன. எனவே, எதனால் தொப்பை ஏற்பட்டது. உடல் பருமன் வந்தது என்பதை அறிந்து அதை சரி செய்ய வேண்டும்.
தொப்பையைக் குறைக்க முயற்சிக்கும் போது அவர் சொன்னார், இவர் சொன்னார் என்று கண்டதை முயல்வதை நிறுத்த வேண்டும். வயிற்றுப் பகுதிக்கு மட்டும் கடுமையான உடற்பயிற்சி, கடுமையான உணவுக் கட்டுப்பாடு என எதையும் செய்யக் கூடாது. உடற்பயிற்சி என்பது முழு உடலுக்கானதாக இருக்க வேண்டும்.
கொழுப்பு இல்லாத உணவு தொப்பையைக் குறைக்க உதவும் என்று சிலர் சொல்வார்கள். ஆனால் அது உண்மையில்லை. பல கொழுப்பு இல்லாத உணவுகளில் சர்க்கரை அளவு அதிகமாக இருக்கிறது. அது மீண்டும் உடல் பருமனுக்குத்தான் வழிவகுக்கும். அளவுக்கு அதிகமான கார்போஹைட்ரேட் கூட தொப்பைக்கு வழிவகுக்கும். உண்மையில் நம்முடைய உடல் ஆரோக்கியமாகச் செயல்பட அன்றாட உணவில் சிறிதளவு ஆரோக்கியமான கொழுப்பு சத்து இருப்பது அவசியம்.
கொழுப்பு உணவை தவிர்க்க வேண்டும் என்பது போல சிலர் கார்போஹைட்ரேட் உணவைத் தவிர்ப்பதும் அவசியம் என்று கருதுகின்றனர். இதுவும் ஒரு தவறான கருத்துதான். மைதா, சர்க்கரை போன்ற எளிய கார்போஹைட்ரேட்களை எடுத்துக்கொள்வது கூடாது. அதே நேரத்தில் முழு தானியம் போன்ற சிக்கலான கார்போஹைட்ரேட் உணவை தினமும் எடுத்துக்கொள்ள வேண்டும். சமச்சீரான கார்போஹைட்ரேட் மற்றும் புரதச்சத்து கொண்ட உணவுகள் ரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்க உதவுவதுடன் உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்துக்கும் துணை செய்கிறது.
வயிற்றுப் பகுதிக்கான உடற்பயிற்சிகள் செய்வது தொப்பையை மிக விரைவாக கரைக்க உதவும் என்ற நம்பிக்கை உள்ளது. இது ஓரளவுக்கு உதவியாக இருக்கலாம். ஆனால் மீண்டும் தொப்பை கூடிவிடும். உடற்பயிற்சி என்பது முழு உடலுக்கானதாக இருக்க வேண்டும். எனவே, உடற்பயிற்சியாளரிடம் முழு உடலுக்கான உடற்பயிற்சிகளை பரிந்துரைக்க கேட்க வேண்டும். அதனுடன் வயிற்றுப் பகுதிக்குக் கூடுதலாக பயிற்சியைக் கேட்டு செய்யும் போது முழு உடலும் ஃபிட் ஆகும்.
சிலர் உணவு உட்கொள்வதைத் தவிர்ப்பது தொப்பையைக் குறைக்க உதவும் என்று நம்புகின்றனர். ஒரு வேளை உணவைத் தவிர்ப்பது உடலின் மெட்டபாலிசத்தை குறைத்து அடுத்தவேளை அதிக அளவில் உணவை எடுத்துக்கொள்ளச் செய்யும். இது உடல் எடைக் குறைப்புக்கு எதிரானதாக மாறிவிடும். உணவு உட்கொள்ளாமல் இருப்பது சற்று நேரத்துக்குத்தான் கலோரி பற்றாக்குறையை உண்டாக்கும். அடுத்த வேளை உணவு எடுக்கும்போது அது அதிக அளவில் கலோரியை கொழுப்பாக மாற்றி உடலில் சேமிக்கச் செய்துவிடும்.
கார்டியோ பயிற்சி செய்தால் மட்டும் போதும் தொப்பை குறைந்துவிடும் என்று சிலர் நினைக்கின்றனர். கார்டியோ பயிற்சிகள் கலோரியைக் குறைக்க உதவும். ஆனால் வலு தரும் உடற்பயிற்சிகள் மெட்டபாலிசத்தை தூண்டி, உடலில் ஏற்கனவே படிந்துள்ள கொழுப்பைக் கரைக்கும்.