ஆர்ம்ஸ்ட்ராங் கொலை : சென்னையின் புதிய கமிஷ்னராக அருண் நியமனம்… சந்தீப் ராய் ரத்தோர் மாற்றம்!
கடந்த வெள்ளிக்கிழமை இரவு பகுஜன் சமாஜ்வாதி கட்சியின் மாநிலத் தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் கொல்லப்பட்டது பெரும் சர்ச்சைகளை கிளப்பியது. மாயாவதி உள்பட அரசியல் தலைவர்கள் பலரும் தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு குறித்து கேள்விகள் எழுப்ப, இன்று காலை சென்னை கமிஷ்னரை மாற்றி உத்திரவிட்டிருக்கிறது தமிழக அரசு.
முன்னாள் திருச்சி, மதுரை கமிஷ்னரும், கடந்த அதிமுக ஆட்சியின்போது சென்னையின் கூடுதல் கமிஷ்னராகப் (டிராஃபிக்) பணியாற்றியவருமான ஏ.அருண் ஐபிஎஸ் சென்னை மாநகர கமிஷ்னராக நியமிக்கப்பட்டிருக்கிறார். 1998-ம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரியான அருண் மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் படித்தவர்.
அருண் கமிஷ்னராக அறிவிக்கப்பட்டிருப்பதோடு, அவர் இதுவரைக்கும் இருந்த பொறுப்பில் டேவிட்சன் தேவாசிர்வாதம் ஐபிஎஸ் அதிகாரியை சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியாக பணியமர்த்தியிருக்கிறது தமிழக அரசு. மிகவும் சீனியர் அதிகாரியான டேவிட்சன் தேவாசிர்வதம் உளவுத்துறை உள்பட காவல்துறையின் பல்வேறு பிரிவுகளில் திறம்பட பணியாற்றியவர்.
டிஜிபி சங்கர் ஜிவாலுக்கு அடுத்த ரேங்க்கில் இருந்த அருண், டேவிட்சன் தேவாசிர்வதம் என இருவரையுமே முக்கிய பொறுப்பில் பணிக்கு அமர்த்தியிருப்பதன் மூலம் சட்டம் ஒழுங்கை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து இழந்த பெயரை மீட்டெடுக்க முடிவெடுத்திருக்கிறது திமுக அரசு.