இனி திருமணம் ஆகாதவர்களும் குழந்தைகளை தத்தெடுக்கலாம்... மத்திய அரசின் புதிய வழிகாட்டுதல்!

இனி திருமணம் ஆகாதவர்களும் குழந்தைகளை தத்தெடுக்கலாம்... மத்திய அரசின் புதிய வழிகாட்டுதல்!

இந்தியாவில் இதுவரையில் ‘2016 மாதிரி குழந்தை வளர்ப்பு’ வழிகாட்டுதல்படி திருமணம் ஆகியும் குழந்தை இல்லாத தம்பதிகள் மட்டுமே குழந்தைகளைத் தத்தெடுக்க முடிந்தது. இந்த விதிகளை திருத்தி திருமணம் ஆகாத தனிநபர்களும் தத்தெடுக்க புதிய வழிகாட்டுதல் வெளியாகியுள்ளது.
Published on

திருமணம் ஆகாதோர், வாழ்க்கைத் துணையை இழந்தவர்கள், விவாகரத்து செய்தவர்கள், சட்டப்படி பிரிந்து வாழ்பவர்களும் இனி குழந்தைகளை தத்தெடுத்து வளர்க்கலாம் என மத்திய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டு அமைச்சகம் புதிய வழிகாட்டுதலை வெளியிட்டுள்ளது. இதன்படி 35 வயதிலிருந்து 60 வயதுக்குள் இருப்பவர்கள் ஆதரவற்ற இல்லங்களில் வளர்ந்து வரும் 6 வயது நிறைந்த குழந்தைகளை தத்தெடுக்கலாம். முதல் இரண்டு ஆண்டுகள் குழந்தை பராமரிப்புக்குப் பிறகு தத்தெடுத்து வளர்க்க அனுமதி அளிக்கப்படும்.

இதில் ஆண், பெண் என இரு பாலர் குழந்தைகளையும் தத்தெடுத்து வளர்க்கும் உரிமை திருமணம் ஆகாத பெண்களுக்கு மட்டுமே அளிக்கப்படுகின்றது. ஆணாக இருக்கும்பட்சத்தில் ஆண் குழந்தையை மட்டுமே தத்தெடுத்து வளர்க்க அனுமதி வழங்கப்படுகிறது. மேலும், ஏற்கெனவே பெற்ற குழந்தைகள் இருந்தாலும் தம்பதிகள் குழந்தைகளை தத்தெடுக்க புதிய சட்டத்தில் இடம் உண்டு. அதேசமயத்தில் குறைந்தபட்சம் இரண்டாண்டுகள் சுமுகமான இல்லற வாழ்க்கையை சம்பந்தப்பட்ட தம்பதிகள் வாழ்ந்து வருவதற்கான சாட்சி கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டு அமைச்சகம், கொண்டு வந்திருக்கும் இந்த புதிய திருத்தப்பட்ட '2024 மாதிரி குழந்தை வளர்ப்பு வழிகாட்டுதல்' அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. இந்த தளத்தில் குழந்தைகளை தத்தெடுக்க விரும்பும் பெற்றோர்கள் மற்றும் தனிநபர்கள் தங்களது ஆவணங்களை பதிவேற்றம் செய்து கொள்லலாம். அவற்றை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகள் பார்வையிடுவார்கள். தத்தெடுப்பு விதிகள் தற்போது தளர்த்தப்பட்டதால் கூடுதல் எண்ணிக்கையிலான ஆதரவற்ற குழந்தைகளுக்கு அன்பையும், அரவணைப்பும் கொண்ட பெற்றோர்கள் கிடைக்க வாய்ப்பு கிடைக்கும். அதேசமயம் ஆபத்துகளும் உண்டு. அரசின் தீவிர கண்காணிப்பு அவசியம்!

Related Stories

No stories found.
logo
News Tremor
newstremor.com