10 ஆண்டுகள் கழித்து ஜம்மு-காஷ்மீரில் சட்டசபை தேர்தல்... தேதி அறிவிப்பு!
இந்திய நாட்டின் விடுதலைக்குப் பிறகு ஜம்மு காஷ்மீர் இந்தியாவுடன் இணைக்கப்பட்டு பல்வேறு சிறப்பு அந்தஸ்துகளைக் கொண்ட மாநிலமாக இருந்தது. 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5-ம் தேதி ஜம்மு காஷ்மீர் மாநிலத்திர்க்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசியல் சாசனத்தின் 370வது பிரிவை மத்திய பாஜக அரசு நீக்கியது. அதுமட்டுமின்றி ஒருங்கிணைந்த ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை சட்டசபையுடன் கூடிய ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசமாகவும், சட்டசபை இல்லாத லடாக் யூனியன் பிரதேசமாகவும் இரண்டாக பிரிக்கப்பட்டது.
2019-ம் ஆண்டு முதலே ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச சட்டசபை செயல்படாமல் இருந்து வருகிறது. ஜம்மு காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்தை தர வேண்டும் என்றும் சட்டசபை தேர்தலை நடத்த வேண்டும் என்பது அம்மாநில அரசியல் கட்சிகளின் கோரிக்கையாக இருந்துவந்தது. இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகளில் ஜம்மு காஷ்மீர் சட்டசபைக்கு செப்டம்பர் 30, தேதிக்குள் தேர்தல் நடத்த வேண்டும் என உச்சநீதிமன்றம், மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுத்துவந்த நிலையில் ஜம்மு காஷ்மீர் ஒருங்கிணைந்த மாநிலமாக இருந்தபோது 2014-ம் ஆண்டுதான் கடைசியாக சட்டசபை தேர்தல் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
10 ஆண்டுகள் தேர்தலையே சந்திக்காத ஜம்மு காஷ்மீர், தற்போது முதல்முறையாக யூனியன் சட்டசபை தேர்தலை சந்திக்க உள்ளது. ஜம்மு காஷ்மீரின் சட்டசபை தேர்தல் செப்டம்பர் 18, 25 மற்றும் அக்டோபர் 1 ஆகிய தேதிகளில் மூன்று கட்டங்களாக நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் இன்று தெரிவித்துள்ளது.
ஹரியானா மற்றும் ஜம்மு காஷ்மீர் ஆகிய இரு சட்டமன்றங்களிலும் தலா 90 இடங்கள் உள்ளன. மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநிலங்களில் சட்டசபை தேர்தல் பின்னர் நடைபெறவுள்ளது. ஹரியானாவில் ஒரே கட்டமாக அக்டோபர் 1ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இரண்டு சட்டசபை தேர்தல் முடிவுகளும் அக்டோபர் 4-ம் தேதி அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் 90 தொகுதிகளில் 42.6 லட்சம் பெண்கள் உட்பட 87.09 லட்சம் வாக்காளர்கள் இருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. ஜம்மு காஷ்மீரில் 24 தொகுதிகளுக்கு முதல் கட்டமாக செப்டம்பர் 18-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும். மேலும் 26 தொகுதிகளுக்கு இரண்டாம் கட்டமாக செப்டம்பர் 25-ம் தேதி வாக்குப்பதிவு. இறுதிக்கட்டமாக அக்டோபர் 1-ம் தேதி 40 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
10 ஆண்டுகள் கழித்து குறிப்பாக ஆர்ட்டிகள் 370வது பிரிவு நீக்கத்துக்குப் பின்னர் யூனியன் பிரதேசமாக ஜம்மு காஷ்மீர் எதிர்கொள்ளும் முதல் சட்டசபை தேர்தல் என்பதால் இது மக்கள் மற்றும் அரசியல் கட்சிகளுக்கிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.