தினமும் 993 முட்டை பஃப்ஸ்… 5 ஆண்டுக்கு 3.62 கோடி செலவு கணக்கு சொன்ன முதலமைச்சர் அலுவலகம்!
ஆந்திராவில் சந்திர பாபு நாயுடு முதலமைச்சராகப் பதவியேற்றதில் இருந்து முன்னாள் முதல்வரான ஜெகன் மோகன் ரெட்டி மீது ஊழல் புகார்கள் தொடர்ந்து வந்த வண்ணம் இருக்கின்றன. இதில் லேட்டஸ்ட்டாக முட்டை பஃப்ஸில் ஊழல் நடந்திருப்பதாக பகீர் கிளப்பியிருக்கிறது ஆளும் கட்சி.
முன்னாள் ஆந்திர முதல்வரான ஒய்.எஸ். ராஜசேகர் ரெட்டியின் மகனான ஜெகன் மோகன் ரெட்டி 2019 ஆந்திர சட்டசபைத் தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றிபெற்று முதல்வரானார். 2019 முதல் 2024 வரை அவர் ஆட்சியில் இருந்த 5 ஆண்டுகளில் பல்வேறு ஊழல்கள் நடந்திருப்பதாக இப்போது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் தினந்தோறும் வெளியாகிக்கொண்டிருக்கிறது.
ஜெகன் மோகன் ரெட்டி பதவியில் இருந்த 5 ஆண்டு காலமும் முதலமைச்சர் அலுவலகத்துக்கு மட்டும் தினமும் 993 முட்டை பஃப்ஸுகள் வாங்கப்பட்டதாக கணக்கு காட்டியிருக்கிறார்கள். முட்டை பஃப்ஸ் வாங்குவதற்காக மட்டும் ஆண்டுக்கு 72 லட்சம் ரூபாய் செலவானதாகவும், 5 ஆண்டு கால ஆட்சியில் 3.62 கோடி ரூபாய் இந்த முட்டை பஃப்ஸ் வாங்க செலவு செய்ததாகவும் முதலமைச்சர் அலுவலகம் கணக்கு சொல்லியிருக்கிறது. அதாவது 5 ஆண்டுகளில் 18 லட்சம் முட்டை பஃப்ஸ்கள் வாங்கி சாப்பிட்டதாக கணக்கு காட்டப்பட்டிருக்கிறது.
முட்டை பஃப்ஸிலேயே 3 கோடி ஊழல் என்றால் இன்னும் என்னவெல்லாம் செய்திருப்பார்கள் என ஆளும் தெலுங்கு தேசம் கட்சி சார்பில் எல்லாவற்றையும் விசாரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.