900 பேராசிரியர்களுக்கு வாழ்நாள் தடை... அண்ணா பல்கலைக்கழகம் அதிரடி முடிவு!
சென்னை கிண்டியில் அமைந்துள்ள அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் 450-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. சில கல்லூரிகளில் பேராசிரியர்கள் முறைகேடாக பணியில் அமர்த்தப்பட்டதாக தனியார் அமைப்பு ஒன்று தெரிவித்திருந்தது. அதன்படி பேராசிரியர்கள் விவரங்களை சரிபார்த்து அதில் போலியாக, முறைகேடாக பணியில் சேர்ந்தவர்களின் விவரங்களை அண்ணா பல்கலைக் கழகம் சேகரித்தது.
இந்த விவகாரம் தீவிரமடையும் நிலையில், இதற்காக 3 பேர் கொண்ட குழுவும் அமைக்கப்பட்டது. இதற்கிடையில் அண்ணா பல்கலைக்கழக சிண்டிகேட் கூட்டத்தில் இந்த விவகாரம் தொடர்பாக முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டு இருப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன.
தமிழகத்தில் செயல்பட்டு வரும் தனியார் பொறியியல் கல்லூரிகள் அண்ணா பல்கலைக்கழகத்தில் இணைப்பு அங்கீகாரம் பெறுவதற்காக தங்களின் கல்லூரிகளில் பணியாற்றாத பேராசிரியர்களை பொய்யாக கணக்கு காட்டியதாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. மேலும் இந்த போலி கணக்கு மூலம் தனியார் பொறியியல் கல்லூரிகள் அண்ணா பல்கலைகழக்கத்தில் இணைப்பு அங்கீகாரம் பெற்றுள்ளதாக புகார் கிளம்பியது.
இதுதொடர்பாக அறப்போர் இயக்கம் வெளியிட்ட குற்றச்சாட்டில், "தமிழ்நாட்டில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் 480 கல்லூரிகள் இயங்கி வருகின்றன. கடந்த கல்வி ஆண்டில் 224 தனியார் சுயநிதி கல்லூரிகளில் 353 பேராசிரியர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட கல்லூரிகளில் ஒரே நேரத்தில் பணியாற்றுவது போன்று போலியான கணக்கு காட்டப்பட்டிருப்பது ஆதாரங்களுடன் கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களில் 175 பேர் முனைவர் பட்டம் பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
போலி பேராசிரியர்கள் விவகாரத்தில் தொடர்புடைய 200-க்கும் மேர்ப்பட்ட தனியார் பொறியியல் கல்லூரிகள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. மேலும் இதில் சம்பந்தப்பட்ட 900 பேராசிரியர்களுக்கு வாழ்நாள் தடை விதிக்கவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு அண்ணா பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட் நிர்வாகிகளும் ஒப்புதல் அளித்திருப்பதாக கூறப்படுகிறது.