ஆம்ஸ்ட்ராங் கொலை : ரவுடிகள் நாகேந்திரன், சம்போ செந்தில் குற்றவாளிகள்... குற்றப்பத்திரிகை தாக்கல்!
குற்றம் நடந்து 90 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகையை போலீஸார் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவேண்டும் என்கிற நடைமுறைபடி ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு விசாரணை அறிக்கையை இன்று சென்னை எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் போலீஸார் தாக்கல் செய்துள்ளனர்.
5000 பக்கங்களைக் கொண்ட குற்றப்பத்திரிகையில் 30 பேர் குற்றவாளிகளாக குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். இதில் ஏ1 குற்றவாளி எனச்சொல்லப்படும் அக்யூஸ்ட் நம்பர் 1 ஆக வேலூர் சிறையில் இருக்கும் நாகேந்திரனும், ஏ2 குற்றவாளியாக தலைமறைவாக இருக்கும் சம்போ செந்தில், ஏ3 குற்றவாளியாக நாகேந்திரனின் மகனும், காங்கிரஸ் கட்சியில் இருந்தவருமான அஸ்வத்தாமன் ஆகியோர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
குற்றம் சாட்டப்பட்டுள்ள 30 பேரில் 27 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதில் 25 பேர் மீது குண்டர் சட்டம் போடப்பட்டிருக்கிறது. சம்போ செந்தில் மற்றும் அவரது கூட்டாளி மொட்டை கிருஷ்ணன் மட்டும் இன்னும் போலீஸாரிடம் பிடிபடாமல் தலைமறைவாக உள்ளனர். ஆம்ஸ்ட்ராங் கொலையில் நேரடியாக ஈடுபட்ட திருவேங்கடம் போலீஸ் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்டுவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
குற்றப்பத்திரிகையில் போலிஸார் பல முக்கியமான சாட்சியங்களை, ஆவணங்களை, பறிமுதல் செய்யப்பட்ட பணம் மற்றும் சாட்சியங்களைக் குறிப்பிட்டு தாக்கல் செய்துள்ளனர். இந்த வழக்கில் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாகவும், சம்போ செந்திலின் கைது இந்த வழக்கின் முக்கிய கட்டமாக இருக்கும் என்றும் போலீஸார் தெரிவித்துள்ளனர்.