ஆம்ஸ்ட்ராங் கொல்லப்பட்டு இன்றுடன் ஒரு மாதம் நிறைவு… இதுவரை இந்த வழக்கில் நடந்திருப்பது என்ன?!
வடசென்னையின் முக்கிய தலித் தலைவராக செல்வாக்குடன் இருந்த ஆம்ஸ்ட்ராங் கொல்லப்பட்டது தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த கொலை வழக்கின் 30 நாட்களின் டைம்லைன் இங்கே!
ஜூலை 5 - ஆம்ஸ்ட்ராங் கொலை
ஆம்ஸ்ட்ராங் கொல்லப்பட்ட 5 மணி நேரத்துக்குள் 8 பேர் அண்ணாநகர் காவல்நிலையத்தில் சரணடைந்தனர். கடந்த ஆண்டு (2023) ஆகஸ்ட் மாதம் ஆற்காடு சுரேஷைக் கொன்றதற்கு பழிவாங்குவதற்காக ஆம்ஸ்ட்ராங்கை கொன்றதாக ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு வாக்குமூலம் அளித்ததாக போலீஸ் முதல் தகவலை வெளியிட்டது. முதற்கட்ட விசாரணையில், ஆம்ஸ்ட்ராங்கின் ஆட்கள் மூலம் தாங்கள் கொலை செய்யப்படலாம் என்கிற அச்சம் இருந்ததாகவும், அதோடு அண்ணனின் கொலைக்கு பழிவாங்க ஆற்காடு சுரேஷின் பிறந்ததாளை, ஆம்ஸ்ட்ராங்கின் இறந்தநாளாக மாற்ற திட்டமிட்டதாகவும் பொன்னை பாலு வாக்குமூலம் அளித்ததாக போலீஸார் தெரிவித்தனர்.
ஜூலை : 6 - தொண்டர்கள் போராட்டம்!
ஆம்ஸ்ட்ராங்கின் உடலை வாங்கமறுத்து ராஜீவ் காந்தி அரசு பொதுமருத்துவமனை முன்பாக போராட்டங்கள் நடைபெற்றது. ஆம்ஸ்ட்ராங்கின் உடலை பகுஜன் சமாஜ்வாதி கட்சியின் அலுவலகத்திலேயே புதைக்கவேண்டும் என்கிற கோரிக்கை நிராகப்பட, ஆம்ஸ்ட்ராங் தரப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர வழக்கு தொடுத்தது.
ஜூலை : 7 - மாயாவதி குற்றச்சாட்டு
ஆம்ஸ்ட்ராங்கின் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த பகுஜன் சமாஜ் கட்சியின் தேசியத்தலைவர் மாயாவதி, தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சரியாக இல்லை, ஆம்ஸ்ட்ராங் கொலையை சிபிஐ விசாரிக்கவேண்டும் என்றும் வெளிப்படையாகப் பேசினார். இதற்கிடையே ஆம்ஸ்ட்ராங்கின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் “ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சரணடைந்தவர்கள்தான் உண்மைக் குற்றவாளிகளா எனத் தீவிரமாக விசாரிக்கவேண்டும். இந்தக் கொலையில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்து நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்றார்.
இதுவரை 21 பேர் கைது!
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் திமுக, அதிமுக, பாஜக, தமிழ் மாநில காங்கிரஸ் உட்பட பல்வேறு கட்சி பிரமுகர்கள் குறிப்பாக வழக்கறிஞர்கள் உட்பட தற்போது வரை 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கமிஷ்னர் மாற்றம்!
ஆம்ஸ்ட்ராங் கொலையைத் தொடர்ந்து சென்னை மாநகர போலீஸ் கமிஷ்னராக இருந்த சந்தீப் ராய் ரத்தோர் மாற்றப்பட்டு அருண் சென்னை மாநகர காவல் ஆணையாளராக நியமிக்கப்பட்டார். அருண் மாற்றப்பட்டதும் இந்த வழக்கு விசாரணையின் வேகம் கூடியது!
திருவேங்கடம் என்கவுன்ட்டர்!
ஆம்ஸ்ட்ராங் கொல்லப்பட்ட அடுத்த 24 மணி நேரத்தில். சிறையில் அடைக்கப்பட்ட 11 பேரையும் காவலில் எடுத்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், ஆட்டோ டிரைவர் போல நடித்து ஆம்ஸ்ட்ராங்கின் நடவடிக்கைகளை ஒரு மாதமாக கண்காணித்து அவரைக்கொலை செய்ய ரூட் போட்டு கொடுத்த திருவேங்கடத்தை என்கவுன்ட்டர் செய்தது சென்னை மாநகர போலீஸ். மாதவரம் ரெட்டேரி பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஆயுதங்களை கைப்பற்ற அழைத்துச் செல்லும்போது போலீசாரிடம் இருந்து தப்பிச் செல்ல முயன்றதால் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டதாக அறிக்கை வெளியிட்டது போலீஸ்.
அஞ்சலை கைது!
ஆம்ஸ்ட்ராங் கொலையில் ஆற்காடு சுரேஷின் தோழியும், பெண் தாதாவுமான புளியந்தோப்பு அஞ்சலை சம்பந்தப்பட்டிருப்பது போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் தெரியவந்தது. வடசென்னை மேற்கு மாவட்ட பாஜக மகளிர் அணி துணை செயலாளராக பொறுப்பு வகித்து வந்த அஞ்சலை தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்டார். ஆம்ஸ்ட்ராங் கொலையில், பொன்னை பாலு மற்றும் வழக்கறிஞர்கள் சிலருடன் சேர்ந்து அஞ்சலை முக்கிய பங்காற்றியுள்ளதாக கூறப்பட்டது. அதுமட்டுமின்றி, ஆம்ஸ்ட்ராங் கொலை நடந்ததில் பண பரிவர்த்தனை செய்ததில் முக்கிய நபராக இவரை கைது செய்தது போலீஸ்!.
சம்போ செந்தில் & சீசிங் ராஜா
இந்த வழக்கின் முக்கியப்புள்ளியாக கருதப்படும் சம்போ செந்தில், சீசிங் ராஜா ஆகியோரை போலீஸார் இன்னும் நெருங்கவில்லை. சம்போ செந்திலின் கூட்டாளி கிருஷ்ணன் வெளிநாட்டிற்கு தப்பி சென்றுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட இடத்தில் பறிமுதல் செய்யப்பட்ட வெடிகுண்டுகள், இவர்கள் மூலமாக சப்ளை செய்யப்பட்டுள்ளது என்பது கண்டுபிடிக்கபட்டது.
ஆம்ஸ்ட்ராங் மனைவிக்கு கொலை மிரட்டல்!
பெரம்பூரில் ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தினர் வசித்துவரும் வீட்டுக்கு சதீஷ் என்பவர் பெயரில் ஒரு மர்ம கடிதம் வந்துள்ளது. அதில் ஆம்ஸ்ட்ராங்கின் குழந்தையை கடத்தி, அவருடைய குடும்பத்தை கொலை செய்துவிடுவதாக மிரட்டல் வந்துள்ளது. இதையடுத்து ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி, குழந்தை இருக்கும் வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் சந்தேகத்தின் பெயரில் ஒருவரை பிடித்து செம்பியம் போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஆகஸ்ட் 5 - மீண்டும் போலீஸ் காவல்
இன்று குற்றவாளிகளை காவலில் எடுத்து விசாரிக்க செம்பியம் போலீசார் அனுமதி கோரியிருந்த நிலையில் சிறையில் உள்ள பொன்னை பாலு, அருள், ராமு, ஹரிதரன், சிவசக்தி ஆகியோரை காவலில் எடுத்து விசாரிக்க எழும்பூர் நடுவர் நீதிமன்றம் அனுமதி வழங்கியது. மீண்டும் அவர்கள் 7 நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்கப்பட இருப்பதால் மேலும் பல்வேறு முக்கிய தகவல்கள் வெளியாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே பகுஜன் சமாஜ் கட்சி ஆகஸ்ட் 9-ம் தேதி இன்னமும் உண்மைக்குற்றவாளிகளை கைதுசெய்யாததைக் கண்டித்து சென்னையில் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்திருக்கிறது.