ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி சம்போ செந்தில் கைதா… அப்டேட் என்ன?
கடந்த ஜூலை மாதம் 5-ம் தேதி வெட்டிக் கொல்லப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத்தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் கொலைவழக்கு விசாரணை கிட்டத்தட்ட முடிவுக்கு வந்திருக்கிறது. தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் நடுரோட்டில் வைத்து மக்கள் முன்னிலையிலேயே வெட்டிக்கொல்லப்பட்ட ஆம்ஸ்ட்ராங்கின் மரணம் தமிழகம் முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்தசம்பவத்தையொட்டி சென்னை மாநகர கமிஷ்னர் சந்தீப் ராய் ரத்தோர் மாற்றப்பட்டு அருண் கமிஷ்னராகப் பொறுப்பேற்றார். இவர் தலைமை ஏற்றப்பின் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு விசாரணை வேகமெடுத்ததோடு புதிய குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர்.
முதலில் ஆற்காடு சுரேஷின் கொலைக்குப் பழிக்குப்பழியாக அவரது சகோதரர் பொன்னை பாலு தலைமையில் கூலிப்படையினர் ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ததாகச் சொல்லப்பட்டது. பொன்னை பாலு உள்ளிட்டோர் சரணும் அடைந்தனர். ஆனால், இதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், இயக்குநர் பா.இரஞ்சித் உள்பட பலரும் இவர்கள் உண்மைக் குற்றவாளிகள் இல்லை, உண்மைக் குற்றவாளிகள் கைது செய்யப்பட வேண்டும் என எதிர்ப்பு தெரிவித்தனர். இதன்பின்னர்தான் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் வரிசைக்கட்டி பல வழக்கறிஞர்கள் கைது செய்யப்பட்டனர்.
சென்னையின் முக்கிய ரவுடியும், வேலூர் சிறையில் ஆயுள் கைதியாக இருப்பவருமான நாகேந்திரன் மற்றும் அவரது மகன் அஸ்வத்தாமன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். சென்னை பார் கவுன்சில் தேர்தல் மற்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் மத்தியில் ஆம்ஸ்ட்ராங்கின் கை ஓங்கியிருந்ததுதான் அவர் கொலை செய்யப்பட மிக முக்கியமானக் காரணம் எனச்சொல்லப்படுகிறது. சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்களில் இரு சாதியினருக்கு இடையே வெளியே பெரிய பகையாகத் தெரியாத அளவுக்கு உள்ளுக்குள் புகைச்சலும், சலசலப்பும் இருந்ததாகவும், அந்தக் காரணம்தான் ஆம்ஸ்ட்ராங் கொல்லப்பட முக்கியக் காரணம் என்றும் சொல்லப்படுகிறது.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இதுவரை 27 பேர் கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில் மிக முக்கியமானக் குற்றவாளிகளான சம்போ செந்தில், சீசிங் ராஜா, மொட்டை கிருஷ்ணன் என்கிற மூவரையும் கைதுசெய்தபின் அடுத்தவாரம் குற்றப்பத்திரிகையத் தாக்கல் செய்ய இருக்கிறது காவல்துறை.
போலீஸுக்கு நெருக்கமானவர்கள் சிலரிடம் விசாரித்தபோது சம்போ செந்திலை நெருங்கிவிட்டதாகவே சொல்கிறார்கள். எப்போது வேண்டுமானாலும் சம்போ செந்திலின் கைது அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியாகலாம். சம்போ செந்தில் போலீஸ் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட சுபாஷ் பண்ணையாரின் உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது!