ஆம்ஸ்ட்ராங் கொலை : கண்காணித்து தகவல் சொன்ன திருமலைக்கு நெஞ்சுவலி… பூந்தமல்லி சிறையில் என்ன நடந்தது?!
கடந்த ஜூலை 5-ம் தேதி பெரம்பூரில் வெட்டிப்படுகொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத்தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தினந்தோறும் திருப்பங்கள் நடந்துகொண்டேயிருக்கிறது. ஆம்ஸ்ட்ராங்கை கொன்றதாக ஜூலை 5-ம் தேதியே சரண் அடைந்த 8 பேரில் திருவேங்கடம் என்பவன் போலீஸ் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில், கொலை திட்டத்துக்கு முக்கிய உடந்தையாக இருந்த திருமலை என்பவனுக்கு நெஞ்சுவலி என போலீஸ் தெரிவித்துள்ளது.
பூந்தமல்லி தனிச்சிறையில் இருந்த 45 வயதான திருமலை என்கிற சேகருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டதாகவும், உடனடியாக திருமலையை பூந்தமல்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றதாகவும், டாக்டர்கள் உடனடியாக மேல் சிகிச்சைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு செல்லச்சொன்னதால் அங்கே அட்மிட் செய்யப்பட்டிருப்பதாகவும் போலீஸ் தரப்பில் சொல்லப்படுகிறது.
ஆனால், திருமலை தரப்பினரோ சிறையில் திருமலைக்கு எதாவது அசம்பாவிதம் நடந்திருக்கலாம் என சந்தேகம் கிளப்பியிருக்கின்றனர். ஆம்ஸ்ட்ராங் கொலையில் மிக முக்கியமான நபர் திருமலை. ஆம்ஸ்ட்ராங்கிடமே நெருங்கிப்பழகி, அவரிடம் அடிக்கடி செலவுக்கும் காசு வாங்கிக்கொண்டிருந்தவர். இவர்தான் ஆட்டோ ஓட்டுனர் போல அங்கேயிருந்து ஆம்ஸ்ட்ராங்கின் தினசரி நடவடிக்கைகளை கண்காணித்து கொலையாளிகளுடன் சேர்ந்து சதிதிட்டம் தீட்டியவர் என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இந்நிலையில்தான் திருமலைக்கு நெஞ்சுவலி என சொல்லப்படுகிறது!