டெல்லி முதலமைச்சர் பதவியை இன்று ராஜினாமா செய்கிறார் அரவிந்த் கெஜ்ரிவால்… புதிய முதல்வர் யார்?
டெல்லி அரசியலில் அடுத்த அத்தியாயம் இன்று தொடங்குகிறது. ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால், திகார் சிறையில் இருந்து வெளியேறிய நான்கு நாட்களுக்குப் பிறகு, இன்று தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்யப் போவதாக அறிவித்துள்ளார். அவரது இந்த முடிவு டெல்லி மக்களையும், அரசியல் ஆர்வலர்களையும் திகைப்பில் ஆழ்த்தியுள்ளது.
டெல்லி சட்டமன்றத்துக்கு அடுத்த ஆண்டு பிப்ரவரி தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் இந்த ஆண்டே தேர்தலை நடத்திமுடிக்கவும், பிரசாரத்தில் முழுமையாக ஈடுபடவும் அரவிந்த் கெஜ்ரிவால் இந்த முடிவை எடுத்திருப்பதாகத் தெரிகிறது.
புதிய முதல்வராக அரவிந்த் கெஜ்ரிவால் அமைச்சரவையில் நிதி, கல்வி மற்றும் பொதுப்பணித்துறைகளை கவனிக்கும் அதிஷி மார்லெனா எனும் பொறுப்பேற்பார் எனத்தெரிகிறது. தேர்தலுக்கு முன்பாக ஒரு பெண்ணை முதலமைச்சராக நியமிப்பது பெண் வாக்காளர்களிடையே ஆதரவைத்தரும் என நம்புகிறது ஆம் ஆத்மி கட்சி. அதோடு அரவிந்த் கெஜ்ரிவால் சிறையில் இருந்தபோது சுதந்திர தினத்தன்று அதிஷியைத்தான் கொடியேற்ற அனுமதிதருமாறு ஆளுநருக்கு கடிதம் எழுதியிருந்தார் அரவிந்த் கெஜ்ரிவால். அதனால் 43 வயதான அதிஷிதான் முதலமைச்சராகப் பதவியேற்பார் எனத்தெரிகிறது.
‘’மக்கள் எனக்கு நேர்மைக்கான நன்மதிப்பு சான்றிதழை கொடுக்கும் வரை முதல்வர் நாற்காலியில் உட்கார மாட்டேன்’’ எனச்சொல்லியிருக்கிறார் அரவிந்த் கெஜ்ரிவால்.
கெஜ்ரிவாலுடன் இணைந்து தேர்தல் பிரச்சாரம் செய்யப் போவதாகவும், நேர்மையின் அடிப்படையில் வாக்குகளைக் கோரப்போவதாகவும், அதுவரை எந்த அதிகாரப்பூர்வ பதவியையும் ஏற்கப் போவதில்லை என்றும் முன்னாள் துணை முதல்வரும், நீண்ட காலம் சிறையில் இருந்தவருமான மணிஷ் சிசோடியா ஏற்கெனவே அறிவித்துள்ளார்.
சிறையில் இருக்கும் வரை ராஜினாமா செய்யும் பேச்சுக்கே இடமில்லை என மறுத்த அரவிந்த் கெஜ்ரிவால் தற்போது தேர்தலை மனதில் கொண்டு இந்த முடிவை எடுத்திருக்கிறார்.