அம்பேத்கர், பகத் சிங், காலி சேர், ராமர் செருப்பு… டெல்லி முதல்வராக அதிஷியின் முதல் நாள்!
டெல்லியின் முதலமைச்சராக அதிஷி கடந்த சனிக்கிழமை பதவியேற்ற நிலையில் இன்று அவர் முதலமைச்சர் அலுவலகத்துக்கு வந்தார். அரவிந்த் கெஜ்ரிவால் ஏற்கெனவே முதல் அமைச்சராக இருந்த அறையில் பொறுப்பேற்றுக்கொண்ட அதிஷி முன்பிருந்ததுபோலவே ஒரு பக்கம் அம்பேத்கரும், இன்னொரு பக்கம் பகத் சிங் படமும் இருந்தது.
முதலமைச்சரின் இருக்கைக்குப் பின்னால் எந்த மாற்றமும் இல்லாத நிலையில், அவரது இருக்கைக்கு அருகில்தான் மாற்றம் இருந்தது. அரவிந்த் கெஜ்ரிவாலின் காலி இருக்கையை அருகில் வைத்துக்கொண்டு இன்று வேலைகளை ஆரம்பித்தார் அதிஷி.
‘’இன்று டெல்லி முதல்வர் பொறுப்பை ஏற்றுள்ளேன். 14 வருடங்கள் வனவாசம் செய்தபோது அயோத்தியின் ஆட்சியை பரதர் கைப்பற்ற நேரிட்டபோது பரதர் அடைந்த அதே வலி இன்று என் இதயத்தில் இருக்கிறது. அயோத்தியை பரதர் 14 வருடங்கள் ஸ்ரீராமரின் செருப்பை வைத்து ஆட்சி செய்தது போல், டெல்லியில் 4 மாதங்கள் ஆட்சி செய்வேன்’’ என்று சொல்லியிருக்கிறார் அதிஷி.