டெல்லியின் முதலமைச்சராகும் 43 வயது பெண்… யார் இந்த அதிஷி மார்லேனா?!
டெல்லி சட்டமன்றத்துக்கு அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் தேர்தல் நடைபெறயிருக்கும் நிலையில் திகார் சிறையில் இருந்து வெளியேவந்த அரவிந்த் கெஜ்ரிவால் தனது முதலமைச்சர் பதவியை இன்று மாலை ராஜினாமா செய்கிறார். இதற்கிடையே புதிய முதலமைச்சராக ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என்கிற முறையில் அமைச்சர் அதிஷி மார்லேனாவின் பெயர் முதலமைச்சர் பதவிக்கு முன்மொழிந்திருக்கிறார் கெஜ்ரிவால்.
யார் இந்த அதிஷி மார்லேனா?
தற்போது 43 வயதாகும் அதிஷி மார்லேனா டெல்லியின் கல்வி, நிதி மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சராக கடந்த ஆண்டு முதல் பதவி வகித்துவருகிறார். டெல்லியின் முன்னாள் துணை முதல்வர் மணிஷ் சிசோடியாவின் ஆலோசகராக இருந்தவர் 2020 டெல்லி சட்டமன்றத் தேர்தலில் கல்காஜி தொகுதியில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினர் ஆனார். இதே கல்காஜி தொகுதியைச் சேர்ந்தவர்தான் முன்னாள் டெல்லி முதல்வரான ஷீலா தீக்ஷித் என்பது குறிப்பிடத்தக்கது.
1981-ம் ஆண்டு ஜூன் 8-ம் தேதி டெல்லியில் பிறந்த அதிஷி பஞ்சாபிய குடும்பத்தை சேர்ந்தவர். இவரது பெற்றோர் விஜய் சிங் மற்றும் த்ரிப்தா வாஹி. டெல்லி பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்களாகவும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) உறுப்பினர்களாகவும் இருந்தவர்கள். இதனால் அதிஷி சிறு வயதில் இருந்தே படிப்பிலும், அரசியலிலும் இணைந்தே ஆர்வத்துடன் வளர்ந்திருக்கிறார்.
டெல்லி பல்கலைக்கழகத்தில் உள்ள செபாஸ்டியன் கல்லூரியில் வரலாறு துறையில் பட்டப்படிப்பு பெற்ற அதிஷி, பின்னர் பிரபலமான ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் கல்வித் துறையில் மாஸ்டர் பட்டம் பெற்றார். 2025 சட்டமன்றத் தேர்தல் வரை அதிஷி முதலைமைச்சராகத் தொடர்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிஷி ஆட்சியை கவனிக்க, அரவிந்த் கெஜ்ரிவால் தேர்தல் பிரசாரம் மற்றும் கட்சிப் பணிகளை ஒருங்கிணைப்பார் எனச்சொல்லப்படுகிறது.