சல்மான் கானுடன் நெருக்கமாக இருந்த முன்னாள் அமைச்சர் பாபா சித்திக் சுட்டுக் கொலை… கொன்றது யார்?
முன்னாள் காங்கிரஸ் தலைவரும், முன்னாள் அமைச்சரும், தற்போது அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸில் முன்னணி தலைவராக இருந்தவருமான பாபா சித்திக் நேற்றிரவு 9.30 மணியளவில் சுட்டுக்கொல்லப்பட்டார். பாபா சித்திக்கின் மகனும், மகாராஷ்டிராவின் இளம் எம்எல்ஏ-வுமான ஜீஷான் சித்திக்கின் அலுவலகத்துக்கு வெளியே இந்தக் கொலை நிகழ்ந்தது. பைக்கில் வந்த 3 பேர் 9.9எம்எம் பிஸ்டலால் பாபா சித்திக்கை சுட்டுக்கொன்றிருக்கிறார்கள்.
பாபா சித்திக் பல காலமாக காங்கிரஸில் இருந்தவர். பாந்த்ரா வடக்கு தொகுதி எம்எல்ஏ-வாக 1999 முதல் 2014 வரை தொடர்ந்து மூன்று முறை எம்எல்ஏவாக இருந்தார். காங்கிரஸ் ஆட்சியில் அமைச்சராகவும் பதவி வகித்தார்.
சல்மான் கானுக்கு நெருக்கமாக இருந்த பாபா சித்திக்கை பிரபல தாதாவான லாரன்ஸ் பிஷ்னாய் கும்பல் சுட்டுக்கொன்றிருக்கலாம் என கருத்தப்படுகிறது. கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருக்கும் லாரன்ஸ் பிஷ்னாய் வெளிப்படையாக சல்மான் கானை கொன்றுவிடுவோம் என பேசிவருவது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு ஏப்ரல் மாதம்கூட சல்மான் கானின் வீட்டுக்கு வெளியே துப்பாக்கியால் சுட்ட இருவர் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
பாபா சித்திக் சுட்டுக்கொல்லப்பட்ட செய்தி அறிந்ததுமே மும்பை லீலாவதி மருத்துவமனைக்கு விரைந்தார் சல்மான் கான். பாபா சித்திக்கை சுட்டதில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒருவரை போலீஸ் தேடிவருகிறது. இவர்கள் மூவருமே லாரன்ஸ் பிஷ்னாயால் ஒப்பந்தம் செய்யப்பட்ட ஒப்பந்த கொலைகாரர்கள் எனச்சொல்லப்படுகிறது.