சிக்காகோவில் முழங்கிய பராக் ஒபாமா… கமலா ஹாரிஸை அதிபராக வெல்லவைக்க 77 நாள் வியூகம்!
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் களம் சூடுபிடித்துவருகிறது. நவம்பர் 5 தேர்தலுக்கு இன்னும் இரண்டரை மாதங்களே இருக்கும் நிலையில் அமெரிக்காவின் சிக்காகோவில் ஜனநாயகக் கட்சியின் 4 நாள் மாநாடு நடைபெற்றுவருகிறது. இதில் இரண்டாவது நாளான இன்று முன்னாள் அதிபரும், ஜனநாயகக் கட்சியின் பிரபல தலைவருமான பராக் ஒபாமா பேசினார்.
ஒபாமாவின் சிக்காகோ உரை தொண்டர்களிடையே மிகப்பெரிய எழுச்சியை ஏற்படுத்தியிருப்பதாகச் சொல்கிறது ஜனநாயகக் கட்சி. ‘’கமலாவின் பெற்றோர் அமெரிக்காவுக்கு வந்தால் கண்ணியமான வாழ்க்கையை வாழமுடியும் என்கிற நம்பிக்கையில்தான் கடல் கடந்து வந்தார்கள். டிம்மின்(துணை அதிபர் வேட்பாளர்) பெற்றோர் அவருக்கு பொதுச்சேவையின் முக்கியத்துவத்தைக் கற்றுக் கொடுத்தனர். இதுதான் அமெரிக்கா. நாம் எல்லோரும் ஒற்றுமையுடன் உழைத்து, ஒன்றாகப் பயணித்து அமெரிக்காவை உருவாக்கியிருக்கிறோம்.
ஜனநாயகம் என்பது எங்கோ தூசி படிந்த புத்தகத்தில் இருக்கும் சட்டங்களின் தொகுப்பல்ல. நாம் வாழும் முறையும், அடுத்தவர்களை நாம் நடத்தும் விதமும்தான் ஜனநாயகம். நம்மைப் போல் தோற்றமளிக்காதவர்கள், நம்மைப் போல் பிரார்த்தனை செய்யாதவர்கள் என அத்தனைப்பேருக்கும் சமமானது ஜனநாயகம்.
அடுத்த 77 நாட்களில் நாம் ஒவ்வொருவரும் நம் பங்களிப்பைச் சரியாகச் செய்தால், ஒவ்வொருவரின் வீட்டுக் கதவையும் தட்டினால், இதுவரை வேலை செய்யாதது போல் உழைத்தால், அமெரிக்காவின் அடுத்த அதிபராக, துணை அதிபராக கமலா ஹாரிஸையும், டிம் வால்ஸையும் தேர்ந்தெடுப்போம் என்று நான் நம்புகிறேன்’’ என்று பேசியிருக்கிறார் பராக் ஒபாமா!