பெஞ்சமின் நெதன்யாகு
பெஞ்சமின் நெதன்யாகு

இஸ்ரேல் மக்களிடம் மன்னிப்பு கோரிய நெதன்யாகு... போர் நிறுத்தம் சாத்தியமாகுமா?

போர் நிறுத்தப் பேச்சுவார்த்தைக்கு முன்வரவில்லை எனில் மேலும் பிணங்கள் அனுப்பப்படும் என மிரட்டும் ஹமாஸ் ஒருபுறம் ராணுவ நடவடிக்கைகளை அதிகரிக்கும் நெதன்யாகு மற்றொரு புறம்... என்ன நடக்கிறது இஸ்ரேலில்?
Published on

ஹமாஸ் பிடியில் இருந்த பிணைக் கைதிகள் கொல்லப்பட்ட விவகாரம் இஸ்ரேல் முழுவதும் போராட்டம் வெடிக்க வழி வகுத்ததை தொடர்ந்து இஸ்ரேல் மக்களிடம் அந்நாட்டு பிரதமர் நெதன்யாகு மன்னிப்பு கோரியுள்ளார்.

கடந்த சனிக்கிழமை அன்று (ஆகஸ்ட் 31)  தெற்கு காசாவில் உள்ள ரஃபா பகுதியில் உள்ள நிலத்தடி சுரங்க பாதையில் இருந்து ஆறு பணயக் கைதிகளின் உடல்களை மீட்டதாக இஸ்ரேல் ராணுவம் கூறியது. 

கொல்லப்பட்ட இஸ்ரேலிய பணயக் கைதிகளின் உயிரைக் காப்பாற்ற முடியாமல் போனதற்காக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வருத்தம் தெரிவித்து மன்னிப்புக் கோரியுள்ளார்.

 காசா
காசாImage by hosny salah from Pixabay

காசா எல்லைக்கு அருகில் இருந்த நிலத்தடி சுரங்க பாதையில்,  கார்மல் காட், ஈடன் யெருஷால்மி, அல்மோக் சருசி, ஓரி டானினோ, அமெரிக்க இஸ்ரேலி ஹெர்ஷ் கோல்ட்பர்க் மற்றும் ரஷ்ய இஸ்ரேலி அலெக்சாண்டர் லோபனோவ் ஆகியோரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டன.

இவர்கள் அனைவரும் கடந்த ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி  ஒரு இசை விழாவில் இருந்து கடத்தப்பட்டு தீவிரவாதிகளால் சிறை பிடிக்கப்பட்டவர்கள்.  அக்டோபர் 7 தாக்குதலின் போது 251 பேர் பணயக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர். அவர்களில் 97 பேர் காஸாவில் உள்ளனர். இதில் 33 பேர் இறந்துவிட்டதாக இஸ்ரேலிய ராணுவம் கூறுகிறது. 

Palestine Gaza Strip
Palestine Gaza StripImage by hosny salah from Pixabay

பிணைக் கைதிகளாக பிடிக்கப்பட்டு 10 மாதங்களுக்கு மேல் ஆகியும், நெதன்யாகு அவர்களை மீட்க போதுமான நடவடிக்கை எடுக்காததால் பணயக் கைதிகளின் குடும்பங்கள் இஸ்ரேல் முழுவதும் போராட்டங்களுக்கு அழைப்பு விடுத்தது. மிகப்பெரிய தொழிற்சங்கமும் வேலை நிறுத்தப் போராட்டத்தை முன்னெடுத்தது. இந்த போராட்டங்களில் ஆயிரக்கணக்கான இஸ்ரேலியர்கள் பங்குபெற்றனர்.

பிரதமர் நெதன்யாகு செய்தியாளர் சந்திப்பில் "அவர்களை உயிருடன் மீட்காததற்காக நான் உங்களிடம் மன்னிப்பு கேட்கிறேன்" என்று மக்களிடம் பேசினார். "நாங்கள் அவர்களை மீட்கும் முயற்சிகளை மேற்கொண்டோம். ஆனால் நாங்கள் வெற்றி பெறவில்லை. இதற்கு ஹமாஸ் மிகவும் பெரிய விலை கொடுக்க வேண்டும்" என்று அவர் கூறினார்.

காசா
காசாImage by hosny salah from Pixabay

காசாவில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட  இஸ்ரேலிய பணயக் கைதிகளின் குடும்பத்தினர் ஞாயிற்றுக்கிழமை இறுதிச் சடங்குகள் நடத்தி, கதறி அழுதனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.  இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அரசியல் ஆதாயத்திற்காக போரை நீட்டித்ததாக இஸ்ரேலின் விமர்சகர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனும் "இந்தப் போர் முடிவுக்கு வர வேண்டிய நேரம் வந்துவிட்டது" என்று கூறியுள்ளார். கத்தார் மற்றும் எகிப்துடன் இணைந்து  அமெரிக்கா போர் நிறுத்த மத்தியஸ்த முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது. 

இந்நிலையில் ஹமாஸ் தரப்பு, போர் நிறுத்தம் குறித்த ஒப்பந்தத்திற்கு நெதன்யாகு ஒப்புக் கொள்ளாவிட்டால், ராணுவ நடவடிக்கைகளை தொடர்ந்தால், பிணைக் கைதிகளாக இருக்கும் இஸ்ரேலியர்கள் பிணங்களாக தான் நாடு திரும்புவார்கள் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.  

Image by Annette Jones from Pixabay

ஆனால் நெதன்யாகு தன் நிலைப்பாட்டில் இருந்து கொஞ்சம் கூட பின் வாங்கவில்லை. ஹமாஸ் உடன் சமரசம் செய்யும் மனநிலையில் இல்லை என்னும் கருத்தை பிரதிபலிக்கும் விதமாக செய்தியாளர் சந்திப்பில் பேசினார்.

பிணைக் கைதிகள் கொல்லப்பட்டதற்கு மக்களிடம் மன்னிப்பு கோரியது மட்டும் இல்லாமல், பிலடெல்பி காரிடார் எனும் பகுதியில் இஸ்ரேல் ராணுவ கட்டுப்பாட்டை அதிகரிக்க வேண்டும் என்றும் கூறினார். காசாவின் எல்லையில் இருக்கும் பிலடெல்பி காரிடார் என்னும் பகுதியில் இருந்து இஸ்ரேல் ராணுவ படை வெளியேற வேண்டும் என்பதே அமைதி ஒப்பந்தத்தில் ஹமாஸ் முன்வைக்கும் முக்கிய கோரிக்கை. ஆனால் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு பிலடெல்பி காரிடாரின் இஸ்ரேலிய கட்டுப்பாட்டை அதிகரிக்க கோரியுள்ளார். எனவே போர் நிறுத்த ஒப்பந்தம் நிறைவேறுவதில் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. 

Related Stories

No stories found.
logo
News Tremor
newstremor.com