சென்னை முழுக்க கிளை பரப்பிய பீஃப் பிரியாணி கடைக்கு சீல்… தரமற்ற கிச்சன் எனக் குற்றச்சாட்டு!
சென்னையை அடுத்த திருவேற்காட்டில் இயங்கிவருகிறது அப்பு பிரியாணி கடை. திருவேற்காட்டில் உள்ள கிச்சனில் பிரியாணி சமைத்து அயனம்பாக்கம், முகப்பேர், கிண்டி என பல இடங்களில் விற்பனை செய்துவந்தார் இதன் உரிமையாளர் அப்பு. பீஃப் பிரியாணிக்கு புகழ்பெற்ற இந்த கடைக்கு இன்ஸ்டாகிராம், யூடியூபில் விமர்சனங்கள் பாசிட்டிவாகப் பரவ, அப்பு பிரியாணி கடை புகழ்பெற்றது. ஆரம்பத்தில் தள்ளுவண்டியில் விற்கப்பட்டு வந்த பிரியாணி பின்னர் கடையாக மாறியது.
திருவேற்காட்டில் பெரிய இடத்தில் கிச்சன் அமைக்கப்பட்டு அங்கே பிரியாணி சமைத்து சென்னை முழுக்க விற்றுவந்தார் அப்பு. வியாபாரம் சிறப்பாக நடக்க, அப்புவும் ஸ்விஃப்ட் கார் அடுத்து ஆடி கார் என வாங்க, யூடியூப் சேனல்கள் உழைப்பால் உயர்ந்த அப்புவைப் பேட்டி எடுக்க இன்னும் அவர் புகழ்பெற்றார்.
தற்போது இவர் கடையில் பீஃப் பிரியாணி மட்டுமல்லாமல் சிக்கன் பிரியாணியும் விற்பனை செய்யப்படுகிறது. இதற்கிடையே இன்று காலை திருவேற்காட்டில் உள்ள அப்புவின் பிரியாணி சமைக்கும் கிச்சன் தரமற்று இருந்ததாக சோதனை செய்து சீல் வைத்திருக்கிறார்கள் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள்.
பிரியாணி கடையை நடத்தும் அப்புவோ, கடந்த பல மாதங்களாக லைசென்ஸ் வேண்டி அதிகாரிகளின் அலுவலகத்துக்குப்போனதாகவும், ஒருமுறைகூட அதிகாரிகள் நேரம் தந்து பேசவில்லை என்றும் தெரிவித்துள்ளார். ‘’ஏழைங்க முன்னேறக்கூடாதுன்னு நினைக்கிறாங்க. தள்ளுவண்டில கடை வெச்சவன் கடைசி வரைக்கும் தள்ளுவண்டியிலேயேதான் இருக்கணும், கார்லாம் வாங்கக்கூடாதுன்னு இதெல்லாம் பண்றாங்க. என்னை காலி பண்ண நினைக்கிறாங்க’’ என வீடியோ வெளியிட்டிருக்கிறார்.