கனமழையை எதிர்கொள்ளத் தயாராகும் சென்னை… 3 நாட்களுக்கு மழை தொடரும் என எச்சரிக்கை!
வங்காள விரிகுடாவில் உருவாகி வரும் காற்றழுத்த தாழ்வு நிலையால், வட தமிழ்நாடு குறிப்பாக காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு (KTCC) மாவட்டங்களில் அக்டோபர் 14 முதல் 17 வரை கனமழை பொழியும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறைந்த அழுத்தப் பகுதி படிப்படியாக வலுப்பெற்று பின்னர் Depression ஆகவும் மாறும் என வானிலை முன்னெச்ரிக்கை குறிப்பு தெரிவிக்கிறது.
சென்னை மட்டுமல்லாது பாண்டிச்சேரி, நெல்லூர் பகுதிகளும் கன மழையால் பாதிக்கப்படும் எனத்தெரிகிறது. அக்டோபர் 14-ம் தேதி தொடங்கும் மழை 3-4 நாட்களுக்கு தொடர்ந்து நீடிக்கும் நிலை காணப்படுகிறது. இதனால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வட தமிழ்நாட்டில் கன மழை ஏற்படுவதற்கான சூழல் உருவாகியிருக்கும் நிலையில், தென் தமிழ்நாட்டிலும் மழை பரவலாக பெய்யும். இன்று மாலை முதல் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்ட பகுதிகளில் மழை வலுவாகப் பெய்யத்தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.