சென்னையின் டாப் 10 ரவுடிகள்
சென்னையின் டாப் 10 ரவுடிகள்

'பாடி' சரவணன் முதல் 'சம்போ' செந்தில் வரை... சென்னையின் டாப் 10 ரவுடிகளும், திகில் பின்னணியும்!

பிஎஸ்பி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் பல ரவுடிகள் ஒன்றிணைந்து செயல்பட்டது தெரியவந்திருக்கிறது. இதற்கிடையே முக்கிய ரவுடியான நாகேந்திரன் சிறையில் இருந்தபடியே கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில் சென்னையின் டாப் 10 ரவுடிகள் யார் யார், அவர்களின் பின்னணி என்ன?

ரவுடிகள் ஒவ்வொருவரின் பின்னணியும் பல சுவாரஸ்யக் கதைகளை உள்ளடக்கியிருக்கிறது. எல்லா ரவுடிகளுமே கிட்டத்தட்ட எதோ ஒரு வகையில் ஒரு ரவுடியின் கூட்டாளியாகவே அல்லது அவர்களின் எதிரியாகவோ இருக்கிறார்கள்.

1. பாடி சரவணன்

பாடி சரவணன்
பாடி சரவணன்

ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் நாகேந்திரனின் கூட்டாளிதான் ‘பாடி' சரவணன். வியாசார்பாடி சரவணன் என்பதன் சுருக்கம்தான் ‘பாடி' சரவணன். இந்த சரவணின் நண்பன் காமேஷ் என்பவரை இன்னொரு ரவுடியான ‘பொக்கை’ ரவி கொடூரமாக வெட்டிக்கொல்ல, அந்தக் கொலைக்குப் பழிவாங்க மிகவும் துணிச்சலான ஒரு சம்பவத்தை செய்து போலீஸையே மிரட்சிக்கு உள்ளாக்கியவர் இந்த ‘பாடி' சரவணன். காமேஷ் கொலைக்குப் பழிவாங்க பொக்கை ரவியைக் கொல்வதற்கு முன்பாக அவரது கூட்டாளியான பிரபாகரன் என்பவரை டாஸ்மாக் வாசலுக்கு வெளியே வெட்டிக்கொன்றார் பாடி சரவணன். இதனால் பாடி சரவணனைக் கொல்ல பொக்கை ரவி திட்டமிட்டு ஸ்கெட்ச் போட, ஒரு கடையில் நின்றுகொண்டிருந்த சரவணன், பின்னால் ஆட்கள் கூடுவதை உணர்ந்து மின்னல் வேகத்தில் பறந்து தப்பிவிட்டார். இந்த சம்பவத்தில் அவரது கையில் மட்டுமே வெட்டு விழந்தது. இதனால் பொக்கை ரவி இருக்கும்வரை தன்னுடைய உயிருக்கு ஆபத்து எனக் கணக்குப்போட்டார் பாடி சரவணன்.

2014-ம் ஆண்டு ‘பொக்கை’ ரவி கால் எலும்பு முறிவு காரணமாக ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் வேறு பெயரில் சிகிச்சைப் பெற்றுவருவது தெரிந்து மக்கள் நெருக்கடி மிகுந்த மருத்துவமனைக்குள்ளேயே நுழைந்து, பொக்கை ரவியின் இரண்டு மனைவிகளின் முன்பாகவே பாடி சரவணன் தலைமையிலான கும்பல் வெட்டிக்கொன்றது. ‘’அண்ணனைப் பார்க்க வந்திருக்கோம்’’ எனச்சொல்லி பழக்கூடைகளோடு வந்தவர்கள் கூடவே அரிவாளையும் கொண்டுவந்து பொக்கை ரவியை மக்கள் பலரின் கண்முன்பாகவே வெட்டிக்கொன்றனர். தற்போது 52 வயதாகும் பாடி சரவணன் ஆயுள்தண்டனைக் கைதியாக சிறையில் இருக்கிறார்.

2. ‘சிடி’ மணி

‘சிடி’ மணி
‘சிடி’ மணி

தேனாம்பேட்டையில் சாதாரண பழக்கடை நடத்திவந்தவரின் மகன்தான் மணிகண்டன் என்கிற ‘சிடி’ மணி. 90-களில் திருட்டு சிடிக்கள் பிரபலமாக அதை வாங்கிவிற்றுவந்ததன் மூலம் ‘சிடி' மணி எனப் பிரபலமானார். திருட்டு சிடி விற்றதால் போலீஸ் அடிக்கடி ஜெயிலில் பிடித்துப்போட, சிறையில் கிடைத்த தென் மாவட்ட ரவுடிகளின் நட்பு ‘சிடி’ மணியையும் ரவுடியாக உருமாற்றியது. ரியல் எஸ்டேட் தாதாவாக மாறிய மணி 2006-ல் வெங்கடேசன் என்பவரைக் கொலை செய்ததுதான் இவர்மீது பதியப்பட்ட முதல் கொலை வழக்கு. இதன்பிறகு பல்வேறு கொலை, ஆள்கடத்தல், கட்டப்பஞ்சாயத்து, டபுள் டாக்குமென்ட் வழக்குகளில் சிக்கிய ‘சிடி’ மணி கிழக்கு கடற்கரைச்சாலையில் உள்ள ஒரு நிலத்தகராறில் சம்போ செந்திலுக்குப் பகையானார்.

யார் முதலில் யாரைக் கொல்வது என்கிற போட்டாபோட்டியில் ‘சிடி’ மணி ‘சம்போ’ செந்திலைக் கொல்ல ஸ்கெட்ச் போட, எஸ்கேப் ஆன சம்போ செந்தில் சிடி மணியின் சொந்த ஏரியாவான தேனாம்பேட்டையில் வைத்தே நாட்டு வெடிகுண்டை வீசினார். இதில் ‘சிடி’ மணியும், அவரது கூட்டாளி ‘காக்கா தோப்பு' பாலாஜியும் எஸ்கேப் ஆனார்கள். தற்போது சிறையில் இருக்கும் ‘சிடி' மணியிடம் பல கோடி சொத்துகள் இருப்பதாக சொல்லப்படுகிறது. வெள்ளை வண்ண பிஎம்டபிள்யுவில் பயணிக்கும் ‘சிடி’ மணி ஒரு கட்டத்தில் புல்லட் ப்ரூஃப் காரை வாங்கவும் திட்டமிட்டிருக்கிறார். தற்போது  இவர்மீது 15-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலைவையில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.  

3. ‘காக்கா தோப்பு' பாலாஜி!

‘காக்கா தோப்பு' பாலாஜி!
‘காக்கா தோப்பு' பாலாஜி!

வடசென்னையில் பிராட்வே பகுதிக்கு அருகில் இருக்கும் சிறிய பகுதி ‘காக்கா தோப்பு'. இப்பகுதியில் சிறுவயதில் இருந்தே ரவுடியாக உருமாற வேண்டும் என ஆசைப்பட்டு பல கொலை சம்பவங்கள் செய்து ரவுடியானவர் ‘காக்கா தோப்பு' பாலாஜி. சென்னை காவல்துறையின் மத்திய குற்றப்பிரிவின் 'மோஸ்ட் வான்டட்' பட்டியலில் இடம்பெற்ற 'காக்காதோப்பு' பாலாஜி, 2013-ம் ஆண்டு குண்டர் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார். 

‘பில்லா சுரேஷ்', விஜி என இரண்டு எதிர் டீமில் இருந்த ரவுடிகளை வீடு புகுந்து வெட்டிக்கொன்றதன் மூலம் பிரபலமானவர் ‘காக்கா தோப்பு’ பாலாஜி. இவர் மீது 25 கொலை வழக்குகள் உள்ளன. ‘சிடி’ மணியுடன் சேர்ந்து இவரும் தற்போது ஜெயிலுக்குள் இருக்கிறார்.

4. ‘கல் வெட்டு’ ரவி

‘கல் வெட்டு’ ரவி
‘கல் வெட்டு’ ரவி

காக்கா தோப்பு பாலாஜியின் முக்கிய எதிரியும், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியுமான சம்போ செந்திலின் குருதான் ‘கல்வெட்டு’ ரவி. குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் 2013-ம் ஆண்டு சிறையில் அடைக்கப்பட்டார் ‘கல்வெட்டு’ ரவி. இவர் மீது 6 கொலை வழக்குகள் உள்ளன. ரவியின் முக்கிய வருமானம் வட சென்னையில் கன்டெய்னர் லாரிகளை மிரட்டி பணம் பறிப்பது, மாமூல் வாங்குவது எனச் சொல்லப்படுகிறது. 

அடிக்கடி சிறைக்குப்போவதும், வருவதுமாக இருக்கும் கல்வெட்டு ரவி 2021-ம் ஆண்டு பாஜகவில் சேர்ந்தார். திருந்தி வாழ்வதாக டிஜிபி-க்கு மனுவெல்லாம் கொடுத்தார். ஆனால், இவரைக் கைது செய்த போலீஸார் இவரை தொடர்ந்து சிறையில் வைத்திருக்கின்றனர்.

5. ‘காது குத்து’ ரவி

காஞ்சி சங்கரராமன் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான கதிரவனை 2013-ல் வீடு புகுந்து ஒரு கும்பல் கொலை செய்தது. இந்தக் கொலையை செய்தது ‘காது குத்து’ ரவிதான் எனப்போலீஸார் கைது செய்தனர். ‘காது குத்து’ ரவி மீது 50-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.  மிகப்பெரிய ரியல் எஸ்டேட் பஞ்சாயத்துகளில் ஈடுபடுவதுதான் ‘காது குத்து’ ரவியின் தொழில் என்கிறார்கள். 

2016-ம் ஆண்டு இவர் பேரில் கிழக்கு கடற்கரைச் சாலையில் இருந்த 11 கோடி ரூபாய் சொத்துகள் முடக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஆனால், ‘காது குத்து’ ரவிக்கு 100 கோடிக்கும் மேலான சொத்துகள் இருப்பதாகவும், தற்போது அண்டை மாநிலத்தில் ரவி குடும்பத்தினருடன் வாழ்ந்து வருவதாகவும் சொல்லப்படுகிறது.

6. சோமு என்கிற சோமசுந்தரம்!

சோமு என்கிற சோமசுந்தரம்
சோமு என்கிற சோமசுந்தரம்

சோமு என்கிற சோமசுந்தரம் அதிமுக எம்எல்ஏ எம்.கே.பாலனை 2001-ம் ஆண்டு கொலை செய்த வழக்கில் ஆயுள் தண்டனைக் கைதியாக சிறையில் அடைக்கப்பட்டவர். சரியாக 10 ஆண்டுகளுக்கு முன்னர் சிறையில் இருந்தபடியே வழக்கறிஞர் அருணா என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டு செய்தித்தாள்களில் இடம்பிடித்தவர். தற்போது இவர் நன்னடத்தைக் காரணமாக விடுதலை செய்யப்பட்டுவிட்டதாகவும், ஒதுங்கி வாழ்வதாகவும் சொல்லப்படுகிறது. இவர் பிரபல ரவுடி சேராவின்  கூட்டாளியாக இருந்தவர். தற்போது இவருக்கு வயது 58.

7. அரும்பாக்கம் ராதாகிருஷ்ணன்

அரும்பாக்கம் ராதாகிருஷ்ணன்
அரும்பாக்கம் ராதாகிருஷ்ணன்

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவரும், ஆயுள் தண்டனைக் கைதியாகச் சிறையில் இருப்பவருமான ரவுடி நாகேந்திரனின் கூட்டாளிகளில் முக்கியமானவர் அரும்பாக்கம் ராதாகிருஷ்ணன். ரவுடி பினு, சிடி மணி எனப்பல்வேறு ரவுடிகளின் கூட்டணியில் இருந்தவர் நாகேந்திரன் சிறையில் இருந்தபடியே சொல்லும் பல வேலைகளை பக்காவாக முடித்து தருபவர் என்கிறார்கள். அரும்பாக்கம் ராதா இப்போது எங்கிருக்கிறார் என்கிற தகவல் இல்லை.

8. பினு பப்பச்சன்

பினு பப்பச்சன்
பினு பப்பச்சன்

கேரளாவைச் சேர்ந்த பினு பப்பச்சன் என்கிற பினு கடந்த 2018-ம் ஆண்டு தனது 50-வது பிறந்தநாளை முன்னிட்டு பட்டாகத்தியில் கேக் வெட்டி பிரபலமானவர். இந்த பிறந்தநாள் பார்ட்டியில் 75-க்கும் மேற்பட்ட ரவுடிகள் ஒன்றுகூட போலீஸார் சுற்றிவளைத்தபோது எஸ்கேப் ஆன பினு பின்னர் போலீஸில் சரண் அடைந்தார். அப்போது இவர் பொதுமன்னிப்பு கேட்டு ‘’நான் அவ்ளோ பெரிய ரவுடியெல்லாம் இல்லைங்க'’ என வெளியிட்ட வீடியோ வைரலானது. ஆனால், அதன்பிறகும் பினுவின் குற்றங்கள் குறையவில்லை என்கிறார்கள். சமீபத்தில் இவரது மகனும் ஐடி ஊழியர் ஒருவரைத்தாக்கியதாகக் கைது செய்யப்பட்டதாகச் சொல்கிறார்கள்.

9. ரோஹித் ராஜ்

ரோஹித் ராஜ்
ரோஹித் ராஜ்

சமீபத்தில் டி.பி.சத்திரம் போலீஸாரால் சுட்டுப்பிடிக்கப்பட்ட ரோஹித் ராஜ் மயிலை சிவக்குமார் என்கிற பிரபரல ரவுடியை வெட்டிக்கொன்ற வழக்கில் முக்கிய குற்றவாளி. 34 வயதான ரோகித் ராஜ் மீது 10-க்கும் மேற்பட்ட கொலை, கொள்ளை வழக்குகள் நிலுவையில் உள்ளன. பெயிலில் இருந்த இவர் நீதிமன்றத்தில் ஆஜராகாததால் போலீஸார் இவரைப் பிடிக்க முயற்சித்தபோதுதான் போலீஸார் மீது தாக்குதல் நடத்தியதாக சுட்டுப்பிடிக்கப்பட்டார். ஆம்ஸ்ட்ராங் வழக்கில் கைதான வழக்கறிஞர் மலர்க்கொடியின் மகனின் கூட்டாளி இவர் எனச்சொல்லப்படுகிறது. 

10. சம்போ செந்தில்

சம்போ செந்தில்
சம்போ செந்தில்

தூத்துக்குடியைச் சேர்ந்த சம்போ செந்தில் சென்னை சட்டக் கல்லூரியில் படித்தவர். அதிமுக ஆட்சியின்போது போலீஸாரால் என்கவுன்ட்டர் செய்யப்பட்ட வெங்கடேச பண்ணையாரின் உறவினர்தான் இந்த சம்போ செந்தில். இங்கே கல்லூரியில் படிக்கும்போது வடசென்னை ரவுடிகளுடன் பழக்கமாகி கல்வெட்டு ரவியின் கூட்டணியில் இணைந்தவர். 2016-ம் ஆண்டு சென்னை கிழக்கு கடற்கரைச்சாலையில் ஓடும் காரில் வைத்தே வழக்கறிஞர் காமேஷ் என்பர் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கின் மூலம்தான் சம்போ செந்திலின் பெயர் முதன்முதலில் அடிபடத் தொடங்கியது.இந்த வழக்கில் இவரைப் போலீஸ் பிடிக்க முயன்றபோது சம்போ செந்தில் மும்பைக்குத் தப்பிவிட்டார்.

2018-ம் ஆண்டு பாரிமுனையில் நடந்த கொலையிலும் சம்போ செந்திலின் பெயர் அடிபட்டது. சம்போ செந்தில் பார்முனையில் நடத்திவந்த அலுமினிய குடோனில் பணிபுரிந்தவர்கள்தான் இந்தக் கொலையை செய்ததாகச் சொல்லி, சம்போ செந்தில் மீது குண்டர் சட்டம் பாய இருந்தது. ஆனால், சம்போ செந்தில் மீது குண்டர் சட்டம் போடக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றத்துக்கு முன்பாக வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்தினர். கடந்த 2020-ம் ஆண்டு கொரோனா லாக்டெளனுக்கு முன்பாக சென்னை அண்ணாசாலையில் தேனாம்பேட்டை காவல்நிலையத்துக்கு முன்பாக ரவுடிகள் சி.டி.மணி, காக்கா தோப்பு பாலாஜியைக் கொல்ல அவர்கள் பயணித்த கார் மீது நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டது. மணி, பாலாஜி இருவரையும் கொல்ல இந்த ஸ்கெட்டைச்ப் போட்டதும் சம்போ செந்தில்தான் என வழக்கு விசாரணையில் தெரியவந்தது.

ஆம்ஸ்ட்ராங் கொலை நடப்பதற்கு மூன்று வாரங்களுக்கு முன்பாக சென்னை திருமங்கலத்தில் நிகழ்ந்த கொலையிலும் சம்போ செந்திலின் பெயர் அடிபட்டது. இவ்வளவு கொலை வழக்குகள், பல்வேறு குற்றப்பின்னணிகள் இருந்தாலும் இதுவரை சம்போ செந்திலை போலீஸ் ஒருமுறைக் கூட கைது செய்ததில்லை என்கிறார்கள். சமீபத்தில்தான் இவரது முழுமையான போட்டோவே போலீஸ் கையில் கிடைத்திருக்கிறது. சம்போன் செந்தில் கைது செய்யப்பட்டால்தான் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு முடிவுக்கு வரும் என்பதோடு, சென்னையில் குற்ற சம்பவங்களும் குறையும் என்பதால் சம்போ செந்திலை போலீஸார் தீவிரமாகத் தேடிவருகின்றனர். சம்போ செந்தில் ஐரோப்பிய நாடுகளுக்குத் தப்பிவிட்டதாகச் சொல்லப்படுகிறது!

Related Stories

No stories found.
logo
News Tremor
newstremor.com